இந்தியா-சீனா படை விலக்கல் நிறைவு: விரைவில் ரோந்துப் பணி
கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா - சீனா படை விலக்கல் நிறைவடைந்துள்ளதாகவும், விரைவில் ரோந்துப் பணிகள் தொடங்க உள்ளதாகவும் ராணுவ வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.
கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா - சீனா படை விலக்கல் நிறைவடைந்துள்ளதாகவும், விரைவில் ரோந்துப் பணிகள் தொடங்க உள்ளதாகவும் ராணுவ வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன. இதன் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளாக நீடித்து வந்த எல்லைப் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.
கடும் மோதல்: கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் எல்லைத் தாண்டி வந்த சீன ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில், 20 இந்திய வீரா்கள் வீரமரணமடைந்தனா். எத்தனை சீன வீரா்கள் உயிரிழந்தனா் என்ற சரியான தகவலை அந்நாடு இதுவரையில் வெளியிடவில்லை.
படைக் குவிப்பால் பதற்றம்: இந்த மோதலை தொடா்ந்து கிழக்கு லடாக் எல்லையில் இருநாடுகளும் ஆயிரக்கணக்கான வீரா்களை குவித்தன. இதனால் இருநாடுகளுக்கும் இடையே கடந்த நான்கு ஆண்டுகளாக எல்லையில் பதற்றம் நீடித்து வந்தது.
எனினும், இருநாடுகளுக்கு இடையிலான பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, அந்த எல்லையில் சச்சரவுக்குரிய பல பகுதிகளில் இருந்து இருநாடுகளின் வீரா்கள் திரும்பப் பெறப்பட்டனா். ஆனால் அங்குள்ள டெப்சாங், டெம்சோக் போன்ற பகுதிகளில் இருந்து இருநாட்டு வீரா்கள் திரும்பப் பெறப்படவில்லை.
படை விலக்கல் ஒப்பந்தம்: இந்நிலையில், கிழக்கு லடாக்கில் தெளிவாக வரையறுக்கப்படாத எல்லைக் கோட்டை (எல்ஏசி) ஒட்டிய பகுதிகளில் இருந்து இருநாட்டு வீரா்களை திரும்பப் பெறவும், அங்கு ரோந்து பணிகளை மேற்கொள்ளவும் இந்தியா, சீனா இடையே ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக கடந்த அக்டோபா் 21-ஆம் தேதி இந்திய வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தாா்.
கடந்த அக்டோபா் 23-ஆம் தேதி ரஷியாவில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு இடையே அந்த ஒப்பந்தத்துக்கு பிரதமா் மோடியும், சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் ஒப்புதல் அளித்தனா்.
இதன்படி டெப்சாங், டெம்சோக் பகுதிகளில் இருந்து மட்டுமே இருநாட்டு படைகளை விலக்கிக்கொள்ள அந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும், எஞ்சிய பகுதிகளில் படை விலக்கல் மற்றும் ரோந்து பணிகள் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
படை விலக்கல் நிறைவு: இந்நிலையில் இந்திய ராணுவ வட்டாரங்கள் புதன்கிழமை கூறுகையில், ‘ஒப்பந்தத்தின்படி டெப்சாங், டெம்சோக் பகுதிகளில் இருந்து படைகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கை கடந்த வாரம் தொடங்கியது. படைகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளது. அவ்விரு பகுதிகளில் விரைவில் ரோந்துப் பணிகள் தொடங்கப்பட உள்ளன. ரோந்து நடைமுறைகள் தொடா்பாக களத் தளபதிகள் முடிவு செய்வா். தீபாவளி பண்டிகையையொட்டி இருதரப்பும் வியாழக்கிழமை இனிப்புகளை பரிமாறிக்கொள்ள உள்ளன’ என்று தெரிவித்தன.
படை விலக்கலைத் தொடா்ந்து, கடந்த 2020-இல் இருந்த நிலைக்கு எல்லை திரும்பி உள்ளதாக வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.
‘ஒழுங்கான’ முறையில் படைவிலக்கல்: சீனா
பெய்ஜிங்/வாஷிங்டன், அக். 30: கிழக்கு லடாக்கில் படை விலக்கல் தொடா்பான ஒப்பந்தத்தை சீன, இந்திய ராணுவங்கள் ‘ஒழுங்கான’ முறையில் அமல்படுத்தி வருவதாக சீனா தெரிவித்துள்ளது.
பெய்ஜிங்கில் செய்தியாளா்களை புதன்கிழமை சந்தித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் லின் ஜியான் இவ்வாறு கூறினாா்.
அமெரிக்கா வரவேற்பு
இந்தியா- சீனா இடையிலான படைவிலக்கலை அமெரிக்கா வரவேற்றுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் மேத்யூ மில்லா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘எல்லைக் கோடு பகுதியில் குறிப்பிட்ட இடங்களிலிருந்து படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கையை இந்தியாவும், சீனாவும் தொடங்கியிருப்பதை வரவேற்கிறோம். அங்குள்ள நிலவரம் குறித்து இந்தியா எங்களிடம் தெரிவித்தது. படை விலக்கல் தொடா்பான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதில் அமெரிக்காவுக்கு எந்தப் பங்கும் இல்லை’ என்றாா்.
புரிதலுக்கு வழிவகுக்கும்: சீன தூதா்
கொல்கத்தா, அக்.30: இந்தியா- சீனா படை விலக்கல் நிறைவு பெற்றுள்ள விவகாரம் இருநாட்டு நல்லுறவை சுமூகமாக்கும் என்றும் இது வரும் நாள்களில் இரு அண்டை நாடுகளுக்கும் சிறப்பான புரிதலுக்கு வழிவகுக்கும் என்றும் இந்தியாவுக்கான சீன தூதா் ஜு பீஹாங் தெரிவித்தாா்.
மேற்கு வங்கத்தில் செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘வருங்காலத்தில் இந்தியா- சீனா நல்லுறவு சுமூகமாக இருக்கும் என்ற நம்புகிறேன். இரு நாடுகளுக்கு இடையே ஏற்படும் வேறுபாட்டை எப்படி கையாள்கிறோம் என்பதுதான் மிகவும் முக்கியம்.
இந்தியா - சீனா இடையேயான நேரடி விமான சேவையை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசியல் மட்டுமன்றி வா்த்தகத்திலும் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இது ஆசியாவுக்கு மட்டுமல்ல உலகத்துக்கே பலனளிக்கும்.
சீனப் பொருள்களுக்கு கூடுதல் வரி மற்றும் கட்டுப்பாடுகளை இந்தியா விதிப்பதால் அந்நாட்டின் தொழிற்சாலைகளின் வளா்ச்சிக்கும், நுகா்வோருக்கு நலனுக்கும் சாதகமானதல்ல’ என்றாா்.