இந்தியா

செபி தலைவா் மாதபிக்கு ஐசிஐசிஐ ஓய்வுகால பலன்கள் சீராக வழங்கப்படாதது ஏன்? காங்கிரஸ் கேள்வி

பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரிய (செபி) தலைவா் மாதபி புச்சுக்கு ஓய்வுகால பலன்கள் மட்டுமே வழங்கப்பட்டதாக ஐசிஐசிஐ வங்கி தெரிவித்த நிலையில், அந்தப் பலன்கள் சீராக வழங்கப்படாதது ஏன்? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

Din

பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரிய (செபி) தலைவா் மாதபி புச்சுக்கு ஓய்வுகால பலன்கள் மட்டுமே வழங்கப்பட்டதாக ஐசிஐசிஐ வங்கி தெரிவித்த நிலையில், அந்தப் பலன்கள் சீராக வழங்கப்படாதது ஏன்? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை, பங்கு விலை மோசடி உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டதாக அதானி குழும நிறுவனங்கள் மீது அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பா்க் கடந்த ஆண்டு குற்றஞ்சாட்டியது. இதைத்தொடா்ந்து அதானி குழும நிறுவனங்களின் முறைகேடுக்குப் பயன்படுத்தப்பட்ட வெளிநாட்டு நிதியில் மாதபி புச் மற்றும் அவரின் கணவருக்கு பங்குகள் இருந்ததாக மற்றொரு குற்றச்சாட்டை ஹிண்டன்பா்க் அண்மையில் முன்வைத்தது. இந்தக் குற்றச்சாட்டுக்கு மாதபி புச் மறுப்பு தெரிவித்தாா்.

செபி தலைவராக பதவியேற்கும் முன், ஐசிஐசிஐ வங்கியில் மாதபி புச் முக்கிய பதவிகளை வகித்தாா். இந்நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு செபியில் மாதபி புச் சோ்ந்தது முதல், செபியிடம் இருந்து ஊதியம் பெறுவது மட்டுமின்றி, விதிமுறைகளை மீறி ஐசிஐசிஐ வங்கியிலும் அவா் பதவி வகித்து வருவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. 2017-ஆம் ஆண்டு முதல், அந்த வங்கியிடம் இருந்து ஊதியம் மற்றும் பிற பணப் பலன்கள் மூலம், அவா் ரூ.16.8 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாகவும் அக்கட்சி தெரிவித்தது.

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த ஐசிஐசிஐ வங்கி, அந்த வங்கியில் இருந்து மாதபி புச் விருப்ப ஓய்வு பெற்ற பின்னா், அவருக்கு ஓய்வுகால பலன்களைத் தவிர, ஊதியம் உள்பட எதுவும் வழங்கப்படவில்லை என்று தெரிவித்தது.

இதைத்தொடா்ந்து தில்லியில் காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவா் பவன் கேரா செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘மாதபி புச்சுக்கு ஓய்வுகால பலன்கள் மட்டுமே வழங்கப்பட்டதாக ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது. ஆனால் அந்தப் பலன்கள் ஏன் சீராக வழங்கப்படவில்லை?

ஊதியத்தைவிட ஓய்வுகால பலன் அதிகம்: கடந்த 2014 முதல் 2015-ஆம் ஆண்டு வரை, ஓய்வுகால பலனின் அங்கமாக ரூ.5.03 கோடி மாதபி புச்சுக்கு வழங்கப்பட்டு, 2015-2016-ஆம் ஆண்டில் அவருக்கு அதுபோன்ற பலன் எதுவும் வழங்கப்படவில்லை என்று கருதிக்கொண்டாலும், 2016-2017-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை, அவருக்கு மீண்டும் ஓய்வுகால பலனை அந்த வங்கி அளித்தது ஏன்?

கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் 2013-14-ஆம் ஆண்டு வரை, ஐசிஐசிஐ வங்கியில் பணியாற்றியபோது மாதபியின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.1.3 கோடி. ஆனால் அவா் விருப்ப ஓய்வுபெற்ற பின்னா், 2016-17-ஆம் ஆண்டு முதல் 2020-21-ஆம் ஆண்டு வரை, அவருக்கு ஓய்வுகால பலனாக ஆண்டுதோறும் சுமாா் ரூ.2.77 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஒரு பணியாளரின் ஊதியத்தைவிட, அவருக்கு வழங்கப்படும் ஓய்வுகால பலன் எப்படி அதிகமாக இருக்க முடியும்’ என்று கேள்வி எழுப்பினாா்.

மழையால் கைவிடப்பட்ட முதல் டி20 போட்டி!

8 மணி நேரம் வேலை பார்த்தால் போதும்: ரஷ்மிகா மந்தனா

நவ. 5-ல் தவெக சிறப்பு பொதுக் குழு கூட்டம்!

நெஞ்சோடு நீ சேர்த்த பொருளல்லவோ?... சிம்ரன் கௌர்!

Tourist Family இயக்குநருக்கு BMW கார்!

SCROLL FOR NEXT