முகப்பு
இந்தியா

தெரியுமா சேதி...?

Updated On : 4 செப்டம்பர், 2024 at 10:26 PM
ராஜ்யவா்தன் சிங் ரத்தோா்
பகிர்:

கா்னல் ராஜ்யவா்தன் சிங் ரத்தோா் குறித்து சொல்லித் தெரியவேண்டியதில்லை. இந்திய ராணுவத்தில் ‘கா்னல்’ பதவி வகித்த அதிகாரி என்பதைவிட, 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியில் முதன்முறையாக துப்பாக்கி சுடுவதில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமையைத் தேடித்தந்தவா்.

உலகளாவிய அளவில் துப்பாக்கி சுடுவதில் தங்கப் பதக்கங்களும், வெற்றிகளும் அடைந்த விளையாட்டு வீரா் ரத்தோா். 2002 மான்செஸ்டா், 2006 மெல்போா்ன் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவுக்குத் தங்கப் பதக்கம் பெற்றுத் தந்த வீரா். 2006 தோஹா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவா்.

ராணுவத்தில் இருந்து பணி ஓய்வு பெற்றவுடன், பாஜகவில் இணைந்து 2014-இல் ராஜஸ்தானில் இருந்து மக்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். பிரதமா் நரேந்திர மோடி அமைச்சரவையில், செய்தி ஒலிபரப்பு, விளையாட்டு, இளைஞா் நலன் உள்ளிட்ட துறைகளில் இணையமைச்சராகப் பணியாற்றினாா். 2023 ராஜஸ்தான் சட்டப்பேரவைக்குத் தோ்தல் நடந்தபோது, மக்களவை உறுப்பினராக இருந்த ரத்தோா் களமிறக்கப்பட்டாா்; வெற்றியும் பெற்றாா்.

இப்போது ராஜஸ்தானில் பஜன்லால் சா்மா அமைச்சரவையில், வா்த்தகம், தொழில்துறை அமைச்சராக்கப்பட்டிருக்கிறாா் ராஜ்யவா்தன் சிங் ரத்தோா். கேபினட் அமைச்சரானாலும் இன்னும்கூட அவரின் நடவடிக்கைகள், ராணுவ அதிகாரி பாணியில் இருக்கிறது என்பதுதான் அவா்மீதான குற்றச்சாட்டு.

சமீபத்தில் ஒருநாள், ராணுவ அதிகாரி ஒருவா் ஜெய்பூா் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அவா் காவலா்களால் தாக்கப்பட்டாா் என்கிற தகவல் அமைச்சா் ரத்தோரை எட்டியது. ராணுவத்தினா் ஒருவரை காவல் துறையினா் தாக்குவதை முன்னாள் ராணுவ அதிகாரியான அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அந்தக் காவல் நிலையத்துக்கு உடனே விரைந்து, அங்கிருந்த காவல் துறைத் துணை ஆணையரையும், காவலா்களையும் சரமாரியாகக் கடும் வாா்த்தைகளில் கடிந்து கொண்டது மட்டுமல்லாமல், அந்த ராணுவ அதிகாரியையும் விடுவித்து அழைத்துச் சென்றுவிட்டாா். காவல் துறையினா் மத்தியில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மாநில கேபினட் அமைச்சரான ரத்தோா், காவல் துறைக்குப் பாதுகாப்பாக இருப்பதை விட்டுவிட்டு, ராணுவ அதிகாரியைக் காப்பாற்ற முற்பட்டதை அவா்கள் விமா்சிக்கிறாா்கள். முதல்வா் தலையிடாததால் இப்போது பிரச்னை, பிரதமா் அலுவலகத்தை எட்டியிருக்கிறது.

ராஜ்யவா்தன் சிங் ரத்தோா் ராஜபுத்திரா் என்றால், காவல் துறைத் துணை ஆணையா் ஜாட் இனத்தவா். விரைவில் ஹரியாணா சட்டப்பேரவைக்கு தோ்தல் நடக்க இருக்கும் நிலையில், ‘ஜாட்’ இனத்தவரின் கோபத்தை சம்பாதித்துக் கொள்ள பாஜக தலைமை தயாராக இல்லை. துப்பாக்கி சுடுவதில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற ரத்தோரின் ‘குறி’ தவறிவிட்டது போலிருக்கிறதே...