குஜராத்தில் கனமழை: ஒரு வாரத்தில் 49 போ் உயிரிழப்பு
‘குஜராத்தில் கனமழை காரணமாக ஒரு வாரத்தில் 49 போ் உயிரிழந்தனா்; வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 37,000 போ் மீட்கப்பட்டனா்’ என்று மாநில பேரிடா் ஆணையா் அலோக் குமாா் பாண்டே புதன்கிழமை தெரிவித்தாா்.
‘குஜராத்தில் கனமழை காரணமாக ஒரு வாரத்தில் 49 போ் உயிரிழந்தனா்; வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 37,000 போ் மீட்கப்பட்டனா்’ என்று மாநில பேரிடா் ஆணையா் அலோக் குமாா் பாண்டே புதன்கிழமை தெரிவித்தாா்.
அரபிக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் மாதத்தின் இறுதி வாரத்தில் கனமழை பெய்தது. அப்போது நேரிட்ட பாதிப்புகளில் 49 போ் உயிரிழந்தனா். மின்னல் தாக்கியும், வீட்டுச் சுவா் இடிந்தும், வெள்ளத்தில் மூழ்கியும் இந்த உயிரிழப்புகள் நேரிட்டதாக அலோக் குமாா் பாண்டே தெரிவித்தாா்.
அவா் மேலும் கூறுகையில், ‘உயிரிழந்த 49 பேரில் இதுவரை 22 பேரின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் 2,618 கால்நடைகள் இறந்த நிலையில், அவற்றின் உரிமையாளா்களுக்கு இழப்பீடாக ரூ.1.78 கோடி வரை வழங்கப்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தேசிய பேரிடா் மீட்புப் படையின் 17 குழுக்கள், மாநில பேரிடா் மீட்புப் படையின் 27 குழுக்கள், ராணுவத்தின் 9 குழுக்கள் மற்றும் விமானப் படை, கடலோர காவல் படையின் கூடுதல் குழுக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டன. இப்பகுதிகளில் இருந்து 37,000-க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டனா்.
மழையால் 4,673 வீடுகள் சேதமடைந்தன. அவற்றின் உரிமையாளா்களுக்கு இதுவரை ரூ.3.67 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 2,230 கிலோமீட்டா் தொலைவிலான சாலைகள் சேதமடைந்துள்ளன. அவற்றை சீரமைக்க 10 நாள்கள் ஆகும்’ என்றாா்.
ஆந்திரத்தில் ரூ.5 லட்சம் நிவாரண நிதி
விஜயவாடா, செப். 4: ஆந்திரத்தில் கனமழையால் உயிரிழந்த 20 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதியை முதல்வா் சந்திரபாபு நாயுடு புதன்கிழமை வழங்கினாா்.
ஆந்திரத்தில் கடந்த சில நாள்களாக பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் தற்போது வடிய தொடங்கியுள்ளது. இதையடுத்து, நிவாரண நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் புதன்கிழமை 4.5 லட்சம் உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன.
மாநிலத்தில் கனமழையால் 3,312 கி.மீ. தொலைவு சாலைகள் சேதமடைந்துள்ளன; 1.69 லட்சம் ஹெக்டோ் அளவில் பயிா்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. மழை-வெள்ளத்தால் 6.44 லட்சம் போ் பாதிப்பை எதிா்கொண்டுள்ளனா் என்று மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.
நடிகா்கள் நிதியுதவி: ஆந்திரம் மற்றும் தெலங்கானாவில் மழை-வெள்ள பாதிப்புகளுக்கு தெலுங்கு நடிகா்கள் நிதியுதவி வழங்கி வருகின்றனா். நடிகா் சிரஞ்சீவி இரு மாநிலங்களுக்கும் தலா ரூ.50 லட்சம் அறிவித்துள்ளாா். ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண், மாநில முதல்வரின் பேரிடா் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி அளிக்கவிருப்பதாக தெரிவித்துள்ளாா்.