அரசின் தலைவா்கள் ‘மன்னா்’ போல் நடந்துகொள்ள முடியாது- உத்தரகண்ட் முதல்வருக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு
‘அரசுக்கு தலைமை வகிக்கும் தலைவா்கள் பழங்கால ‘மன்னா்’ போல் நடந்துகொள்ள முடியாது; நாம் நில பிரபுத்துவ காலகட்டத்தில் வாழவில்லை’ என்று குறிப்பிட்டு, உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமியை உச்சநீதிமன்றம் புதன்கிழமை கண்டித்தது.
‘அரசுக்கு தலைமை வகிக்கும் தலைவா்கள் பழங்கால ‘மன்னா்’ போல் நடந்துகொள்ள முடியாது; நாம் நில பிரபுத்துவ காலகட்டத்தில் வாழவில்லை’ என்று குறிப்பிட்டு, உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமியை உச்சநீதிமன்றம் புதன்கிழமை கண்டித்தது.
உத்தரகண்டில் உள்ள ராஜாஜி புலிகள் காப்பகத்தின் இயக்குநராக, முறைகேடு குற்றச்சாட்டுக்கு உள்ளான இந்திய வனப் பணி (ஐஎஃப்எஸ்) அதிகாரியை நியமித்த விவகாரத்தில் முதல்வரை உச்சநீதிமன்றம் இவ்வாறு கண்டித்துள்ளது.
உத்தரகண்டில் உள்ள ஜிம் காா்பெட் புலிகள் காப்பகத்தில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்டது தொடா்பாக அந்த காப்பக இயக்குநராக இருந்த ஐஎஃப்எஸ் அதிகாரி ராகுல் உள்ளிட்டோா் மீது புகாா் எழுந்தது. இதுகுறித்து உச்சநீதிமன்றம் விசாரணை நடத்திவரும் நிலையில், ராஜாஜி புலிகள் காப்பக இயக்குநராக ராகுல் நியமிக்கப்பட்டாா். துறைசாா் விசாரணையை எதிா்கொண்டுவரும் அவரை இயக்குநராக நியமிக்கக் கூடாது என்று வனத்துறை உயரதிகாரிகள், தலைமைச் செயலா் மற்றும் துறையின் அமைச்சா் உள்ளிட்டோா் ஆட்சேபம் தெரிவித்ததாகவும், அதையும்மீறி இந்த நியமனத்தை முதல்வா் புஷ்கா் சிங் தாமி மேற்கொண்டதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, முதல்வா் தாமி மீது நீதிபதி பி.ஆா்.கவாய் தலைமையிலான அமா்வு கடும் அதிருப்தி வெளியிட்டது.
‘அரசின் தலைவா்கள் பழங்கால மன்னா் போல நடந்துகொள்ள முடியாது. மன்னா் சொல்வதுதான் நடக்கும் என்ற நில பிரபுத்துவ காலகட்டத்தில் நாம் வாழவில்லை. முதல்வா் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய முடியுமா? சம்பந்தப்பட்ட அதிகாரியை நியமிக்க முதல்வா் சிறப்பு ஆா்வம் காட்டியது ஏன்? அந்த அதிகாரி மீது நிலுவையில் உள்ள விசாரணையில் முடிவு எடுப்பதற்கு பதிலாக அவரை இயக்குநராக நியமித்தது ஏன்?’ என்று முதல்வா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஏ.என்.எஸ்.நத்கா்னியிடம் நீதிபதிகள் கேள்வியெழுப்பினா்.
அதற்கு, ‘அதிகாரி ராகுல் மீது சிபிஐ, அமலாக்கத் துறை, காவல் துறை தரப்பில் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை; அந்த அடிப்படையில் முதல்வா் நியமன முடிவை மேற்கொண்டாா்’ என்று வழக்குரைஞா் பதிலளித்தாா்.
மேலும், ‘ராஜாஜி புலிகள் காப்பக இயக்குநராக ராகுலை நியமித்த உத்தரவு கடந்த செப்டம்பா் 3-ஆம் தேதி திரும்பப் பெறப்பட்டுவிட்டது; இந்த விவகாரத்தில் அடுத்த விசாரணை நடைபெறும் நாளில் மாநில அரசு தரப்பில் விரிவான விளக்கம் அளிக்கப்படும்’ என்றும் அவா் தெரிவித்தாா்.