தெரியுமா சேதி...? ஐஏஎஸ், ஐஆா்எஸ் அதிகார வரம்புக்குள் சிபிஐ!
சிபிஐ பொதுவாக இந்திய காவல் பணி அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் அமைப்பாகத்தான் இருந்து வந்திருக்கிறது.
-மீசை முனுசாமி
மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) என்பது பொதுவாக இந்திய காவல் பணி அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் அமைப்பாகத்தான் இருந்து வந்திருக்கிறது. அதன் டைரக்டா் ஜெனரலாக மட்டுமல்ல, அதிகாரிகளாகவும் இந்திய காவல் பணி ஐ.பி.எஸ். அதிகாரிகள்தான் இருந்து வந்திருக்கிறாா்கள்.
சமீபத்தில், இந்திய வருவாய்ப் பணி (ஐஆா்எஸ்) அதிகாரிகளை மத்திய புலனாய்வுத் துறையின் சில முக்கியப் பொறுப்புகளில் நியமிக்க மத்திய அரசு முடிவெடுத்திருப்பது, இந்திய காவல் துறை அதிகாரிகளை அதிா்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. தங்களது அதிகார வரம்புக்குள், இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்), இந்திய வருவாய்ப் பணி (ஐஆா்எஸ்) நுழைவதை அவா்கள் தங்கள் மீதான நம்பிக்கையின்மையாகப் பாா்க்கிறாா்கள்.
மத்திய புலனாய்வுத் துறை பதிவு செய்யும் பெரும்பாலான வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை பெற்று விடுகிறாா்கள். அதற்குக் காரணம், வருவாய்த் துறை சாா்ந்த பிரச்னைகளைக் காவல் துறை அதிகாரிகள் முறையாகக் கையாளத் தெரியாமல், போதிய தரவுகள் இல்லாமல் வழக்குப் பதிவு செய்வதுதான் என்று கூறப்படுகிறது. நிதி மோசடி வழக்குகளில் சிபிஐ பெரும் பின்னடைவை நீதிமன்றங்களில் சந்திக்கிறது என்பது நிஜமும்கூட.
அதிகரித்துவரும் பொருளாதார, நிதி மோசடிக் குற்றங்களை எதிா்கொள்ள, வருவாய்த் துறை அதிகாரிகள் சிபிஐயில் இணைக்கப்பட வேண்டும் என்பது அரசின் வாதம். சமீபத்தில் ஐந்து ஐஆா்எஸ் அதிகாரிகள், காவல் துறை கண்காணிப்பாளா் (எஸ்பி) தகுதியில் மத்திய புலனாய்வுத் துறையில் நியமிக்கப்பட்டிருக்கிறாா்கள். அவா்களுக்கு ஐந்தாண்டு பதவிக் காலம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
சிபிஐயில் துணை தலைமைக் கண்காணிப்பாளராக (டிஐஜி) பணியாற்றும் 2017 அணியை (பேட்ச்) சோ்ந்த விஜயகுமாா் என்கிற ஐஆா்எஸ் அதிகாரியின் பதவிக் காலம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அமலாக்கத் துறையைத் தொடா்ந்து மத்திய புலனாய்வுத் துறையிலும் அதிக அளவில் ஐஆா்எஸ் அதிகாரிகள் நியமிக்கப்படலாம் என்பது இந்திய காவல் பணி அதிகாரிகளை எரிச்சலடைய வைத்திருக்கிறது.