லக்னௌ: உத்தரப்பிரதேசத்தில் ஆம்புலன்ஸில் வந்துகொண்டிருந்த நோயாளியை வெளியே தள்ளிவிட்டு, அவரது மனைவியை ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் உதவியாளரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் காஸிபூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை வீட்டுக்கு அழைத்து வர அவரது மனைவி ஆம்புலன்ஸை வாடகைக்கு எடுத்தார்.
சித்தார்த் நகர் மாவட்டத்தில் உள்ள தங்களது வீட்டுக்கு கணவரை ஆம்புலன்ஸில் கொண்டுசென்றபோது, நடு வழியில், ஆம்புலன்ஸை நிறுத்திய ஓட்டுநர், அப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்திருக்கிறார்கள். இதனால் சப்தம் போட்ட நோயாளியை ஆம்புலன்ஸிலிருந்து வெளியே தள்ளி, அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த சுவாசக் கருவிகளையும் பிடுங்கியிருக்கிறார்கள்.
பெண்ணுடன் வந்திருந்த சிறுவனை, சிறை வைத்த ஓட்டுநரும், உதவியாளரும், அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தை உலுக்கியிருக்கிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற பணமில்லாததால், கணவரை வீட்டுக்கு அழைத்து வர முடிவு செய்ததாகவும், மருத்துவமனையில்தான் ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் தொடர்பு எண் கொடுத்ததாகவும் கூறியிருக்கிறார்.
மேலும், ஆகஸ்ட் 29ஆம் தேதி ஆம்புலன்ஸில் புறப்பட்டபோது, ஆம்புலன்ஸ் ஓட்டுநர், தன்னை வலுக்கட்டாயமாக முன் பக்கத்தில் அமர்ந்துகொள்ளுமாறு கூறியிருக்கிறார். கணவருடன் எனது சகோதரர் பின்னால் இருந்தார். அப்போது, ஓட்டுநரும், உதவியாளரம் தன்னை வன்கொடுமை செய்ததாகவும், அதனைத் தடுத்து சப்தம் போட்ட போது, கணவருக்கும் சகோதருக்கும் கேட்டு அவர்களும் சப்தம் போட்டனர்.
இதனால், ஆம்புலன்ஸிலிருந்து எனது கணவரை வெளியேற்றி, அவருக்கு கொடுத்து வந்த சுவாசக் கருவியையும் அகற்றிவிட்டனர். என்னை வன்கொடுமை செய்ததோடு, என்னிடமிருந்து ரூ.10,000 பணம் மற்றும் தாலி, கொலுசு போன்றவற்றையும் பறித்துச் சென்றுவிட்டனர்.
இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு, கணவரை மற்றொரு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது, அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டதாகவும் பெண் குறிப்பிட்டுள்ளார்.
வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் உதவியாளரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.