முகப்பு
இந்தியா

போலீஸ் பேரம் பேசவில்லை என கூறுமாறு வற்புறுத்தப்பட்டோம்: பெண் மருத்துவர் பெற்றோர்

போலீஸ் பேரம் பேசவில்லை என கூறுமாறு வற்புறுத்தப்பட்டோம் என பெண் மருத்துவர் பெற்றோர் கூறியுள்ளனர்.

Updated On : 6 செப்டம்பர், 2024 at 11:07 AM
கொல்கத்தாவில் போராட்டம் - கோப்புப்படம்
பகிர்:

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில், கடந்த ஒரு சில நாள்களாக திடீர் திருப்பங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன.

பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டு, உடல் வீட்டுக்குக் கொண்டுவரப்பட்ட போது, தொடர்ந்து வழக்கை கொண்டு செல்லாமல் முடித்துக்கொள்ள, கொல்கத்தா காவல்துறையினர் தங்களிடம் பேரம் பேசியதாக பெண் மருத்துவரின் பெற்றோர் கூறியதாக நேற்று செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், கொல்கத்தா காவல்துறை தங்களிடம் பேரம் பேசவில்லை என்று பெற்றோர் கூறும் விடியோ ஒன்றை திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் வெளியிட்டனர். அதில், காவல்துறையினர் தங்களுக்கு பணம் கொடுக்க முயற்சிக்கவில்லை என்று கூறியிருந்தனர்.

மேலும், விசாரணையில், தங்களுக்கு முழு திருப்தி இருப்பதாகவும் பெற்றோர் கூறியிருந்ததாக விடியோ வெளியிடப்பட்டது. ஆனால், தற்போது, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கூற்றுக்கு பெண் மருத்துவரின் பெற்றோர் அளித்த விளக்கத்தில், அந்த விடியோ, மகளை தகனம் செய்த உடனேயே காவல்துறையினர் எங்களை வற்புறுத்தி எடுத்துக்கொண்டதாகக் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த புதன்கிழமை பெண் மருத்துவரின் பெற்றோரும் உறவினர்களும், மகளின் உடலை வைத்துக்கொண்டே, காவல்துறை எங்களிடம் பேரம் பேசியதாகவும், விரைவாக தகனம் செய்ய நிர்பந்தித்ததாகவும் குற்றம்சாட்டியிருந்தனர். மேலும், எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம், வெள்ளை காகிதத்தில் கையெழுத்துப் போடுங்கள் என்று கொல்கத்தா காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் எங்களிடம் கூறினார் என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

ஆனால், இதனை திரிணமூல் காங்கிரஸ் கட்சி முற்றிலும் மறுத்துவிட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரை எதிர்க்கட்சியினர் இவ்வாறு சொல்ல வைத்திருக்கலாம் என்றும் குற்றம்சாட்டியுள்ளது.

பெண் மருத்துவரின் தாய் கடிதம்

முன்னதாக, ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, பெண் மருத்துவரின் தாய், தனது மகளின் ஆசிரியர்களுக்கு நன்றி கூறும் வகையில் ஒரு கடிதம் வெளியிட்டிருந்தார். அதில், தனது மகள் மருத்துவராக உதவிய அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி. எண்ணற்ற பட்டங்களைப் பெற வேண்டும் என்று எனது மகள் கனவு கண்டிருந்தார். அவர் சொல்வார், எனக்கு பணம் வேண்டாம், நிறைய பட்டங்கள்தான் வேண்டும். அப்போதுதான் மக்கள் ஆரோக்கியமாக வாழ வகை செய்ய முடியும் என்றார்.

மேலும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருக்கும் ஆசிரியர்களும் மாணவர்களும் சிபிஐக்கு தங்களுக்குத் தெரிந்த உண்மைகளை சொல்லுங்கள், எனது மகளை இழந்து 28 நாள்கள் ஆகிவிட்டன, இன்னமும் விசாரணை முடியவில்லை என்று பதவிட்டிருந்தது பலரையும் கவலையடையச் செய்திருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →