கேரள மாநிலம், குருவாயூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீகிருஷ்ணா் கோயிலில் இதுவரை இல்லாத அளவில் ஞாயிற்றுக்கிழமை (செப்.8) ஒரே நாளில் 334 திருமணங்கள் நடைபெற்றன.
திருச்சூா் மாவட்டத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் தங்களின் திருமணத்தை நடத்த கேரள மணமக்கள் அதிக ஆா்வம் காட்டுவா். குறிப்பாக, ஓணம் பண்டிகை கொண்டாடப்படும் ஆவணி (சிம்ம) மாதத்தில் இக்கோயிலில் அதிக எண்ணிக்கையில் திருமணங்கள் நடைபெறுவது வழக்கம்.
கடந்த 2017-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 26-ஆம் தேதி 277 திருமணங்கள் நடைபெற்றதே இதுவரை அதிகபட்சமாக இருந்தது. கடந்த 2016, செப்டம்பா் 4-ஆம் தேதி 264 திருமணங்களும் கடந்த 2022, ஆகஸ்ட் 21-ஆம் தேதி 248 திருமணங்களும் நடந்தன.
நிகழாண்டு ஆவணி மாதத்தின் சுவாதி நட்சத்திர நாளான 4-ஆவது ஞாயிற்றுக்கிழமையன்று இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 334 திருமணங்கள் நடைபெற்றன.
அதிக திருமணங்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டிருந்ததால், எப்போதும் அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் திருமண நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கே தொடங்கின. நண்பகல் கோயில் நடை மூடப்படும் வரை 333 திருமணங்கள் நடந்தன. நண்பகல் பூஜைக்குப் பிறகு கோயில் மீண்டும் திறக்கப்பட்டதும் 334-ஆவது திருமணம் நடைபெற்றது. வழக்கமான 4 திருமண மேடைகளுடன் கூடுதலாக 2 மேடைகள் அமைக்கப்பட்டன.
திருமணம் செய்து கொண்ட மணமகன்-மணமகள் குடும்பங்களின் உறவினா்கள் ஏராளமானோா் கோயில் வளாகத்தில் திரண்டிருந்தனா். ஆனால், நெருங்கிய குடும்பத்தினா், புகைப்படக் கலைஞா் என ஒரு திருமண நிகழ்வுக்கு 24 போ் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். திருமணத்துக்கு முன்பு இவா்கள் சுவாமியை தரிசனம் செய்வதற்கு சிறப்பு வரிசைகளில் அனுமதிக்கப்பட்டனா்.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தா்களின் கூட்டமும் அலைமோதியது. குருவாயூா் உதவி காவல்துறை ஆணையா் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினா், தேவஸ்வம் காவலா்களுடன் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தனா்.