மகாராஷ்டிரத்தில் யுபிஎஸ்சி போட்டித் தேர்வாளர் சனிக்கிழமை இரவில் தற்கொலை செய்து கொண்டார்.
மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் உள்ள வார்டக் நகர் பகுதியில் தங்கி, யுபிஎஸ்சி தேர்விற்காகப் படித்து வந்த போட்டித் தேர்வாளர், சனிக்கிழமை இரவில், தான் குடியிருந்த அடுக்ககத்தின் எட்டாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இருப்பினும், சிகிச்சைக்காக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதிலும், அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உயிரிழந்த நபரின் நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
யுபிஎஸ்சி தேர்வுக்கு படித்து வந்ததால், மனச்சோர்வு அடைந்திருக்கலாம்; அதனால், இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று அவர்கள் கூறினர். மேலும், உயிரிழந்த நபரின் வீட்டிற்குள் மேற்கொண்ட சோதனையின்போது, அவரது அறையில் தற்கொலை குறிப்பு ஒன்றை, காவல்துறையினர் கைப்பற்றினர்.
கடிதத்தில் அவர் தெரிவித்ததாவது, ``இந்த உலகில் வாழ்வது கடினம். எனது பெற்றோர், சகோதரர்கள் மற்றும் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் அவர்களை நேசிக்கிறேன். அவர்கள் என்மீது அதிகளவிலான நம்பிக்கையை வைத்திருந்தனர்; ஆனால், என்னால் அதை நிறைவேற்ற முடியவில்லை. எனது மரணத்திற்கு யாரும் பொறுப்பல்ல’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, உயிரிழந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.