நாக்பூரில் மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவான்குலேவின் மகனுக்கு சொந்தமான சொகுசு கார் அடுத்தடுத்து வாகனங்களை மோதி திங்கள்கிழமை நள்ளிரவு விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த காரில் பயணித்த பாஜக தலைவரின் மகன் சங்கேத் பவன்குலே உள்பட 3 பேர் தப்பியோடியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மதுபோதையில் விபத்து
சங்கேத் பவன்குலேவும் அவரது நண்பர்களும் சென்று கொண்டிருந்த சொகுசு கார், நள்ளிரவு 1 மணியளவில் இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இவர்கள் அனைவரும் மதுபான விடுதியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில், சங்கேத்தின் கார் முதலில் மோதிய ஜிதேந்திர சோம்காம்ப்ளே என்பரின் காரில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஜிதேந்திர சோம்காம்ப்ளே அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து, சங்கேத்தின் ஓட்டுநர் மற்றும் காரில் பயணித்த மற்றொருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர்களின் ரத்த மாதிரியை பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு காவல்துறையினர் அனுப்பியுள்ளனர்.
ஜாமினில் விடுவிப்பு
இந்த விபத்து குறித்து காவல்துறை தரப்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
“மங்காபூர் நோக்கி சங்கேத்தின் கார் சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி சாலையில் சென்று கொண்டிருந்த சில வாகனங்களை இடித்துள்ளனர். இறுதியாக, சங்கேத்தின் காரை மங்காபூர் பாலத்தில் மக்கள் மடக்கி பிடித்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து சங்கேத் உள்ளிட்டோர் தப்பியோடிய நிலையில், காரின் ஓட்டுநரையும் மற்றொருவரையும் பிடித்து சீதாபுல்டி காவல் நிலையத்தில் மக்கள் ஒப்படைத்தனர்.
அதிவேகமாக வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைதான இருவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தனர்.
ஒப்புக்கொண்ட பாஜக தலைவர்
இந்த சம்பவம் குறித்து மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் கூறியதாவது:
“விபத்து ஏற்படுத்திய கார் எனது மகன் பெயரில் பதியப்பட்டதுதான். காவல்துறையினர் எவ்வித பாகுபாடுமின்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
நான் எந்த காவல்துறை உயர் அதிகாரிகளிடமும் பேசவில்லை. சட்டம் அனைவருக்கும் சமமானது” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.