முகப்பு
இந்தியா

ஐஐடியில் படித்த 8,000 மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை!

ஐஐடி நிறுவனங்களில் பயின்ற மாணவர்களுக்கு வேலை கிடைக்காதது பற்றி...

Updated On : 11 செப்டம்பர், 2024 at 12:02 PM
மும்பை ஐஐடி
பகிர்:

ஐஐடி நிறுவனங்களில் 2023 - 24 கல்வியாண்டில் பயின்ற 8,000 மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த கல்வியாண்டில், ஐஐடியில் பயின்ற மொத்தம் 21,500 மாணவர்கள் வேலை வாய்ப்புக்காக விண்ணப்பித்திருந்த நிலையில், 13,410 மாணவர்களுக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது.

வேலையில்லா மாணவர்களின் விகிதம் அதிகரிப்பு

இந்திய தொழில்நுட்பக் கழகங்களில்(ஐஐடி) பயிலும் மாணவர்களுக்கு பெரும் பன்னாட்டு நிறுவனங்களில் அதிக ஊதியத்துக்கு வேலை கிடைக்கும் என்ற பெருமை இருந்த நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டில் கல்வியை முடித்தவர்களில் பலருக்கு வேலை கிடைக்காத சூழல் நிலவுகிறது.

ஐஐடி கான்பூரின் முன்னாள் மாணவரும் வேலைவாய்ப்பு வழிகாட்டியுமான தீரஜ் சிங் லிங்க்டின் தளத்தில் இதுகுறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட 23 அறிக்கைகளை பகுப்பாய்வு செய்ததில், கடந்த 2024ஆம் ஆண்டு ஐஐடியில் பயின்றவர்களில் 21,500 பேர் வளாக வேலைவாய்ப்புக்காக விண்ணப்பித்துள்ளனர்.

அதில், 13,410 பேருக்கு வேலை கிடைத்த நிலையில், 8,090 பேர் வேலை கிடைக்காமல் உள்ளனர். கடந்தாண்டை காட்டிலும், வேலை கிடைக்காத மாணவர்களின் விகிதம் அதிகரித்துள்ளது.

மும்பை ஐஐடி

மும்பை ஐஐடி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த கல்வியாண்டில் பயின்ற மாணவர்களில் 75 சதவிகிதம் பேருக்கு வேலை கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நிறுவனத்தில், 2,414 மாணவர்கள் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், 1,475 பேருக்கு வேலை கிடைத்துள்ளது. 2022-23 கல்வியாண்டில் மொத்தம் 1,516 மாணவர்களுக்கு வேலை கிடைத்திருந்தது.

வேலைவாய்ப்பு கிடைத்தவர்களின் சராசரி வருடாந்திர ஊதியமாக ரூ.17.92 லட்சம் உள்ளது. 22 பேருக்கு ரூ. ஒரு கோடிக்கு மேல் ஊதியத்தில் வேலை கிடைத்துள்ளது.

ஆண்டுக்கு ரூ. 20 லட்சத்துக்கு மேல் 558 பேருக்கு வேலை கிடைத்துள்ள நிலையில், ரூ. 6 லட்சத்துக்கும் குறைவான ஊதியத்துக்கு 10 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.

மேலும், தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், நான்கில் மூன்று மாணவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →