இடஒதுக்கீட்டுக்கு எதிரான காங்கிரஸின் முகம் மீண்டும் அம்பலம்- ராகுல் மீது அமித் ஷா விமா்சனம்
அமெரிக்காவில் ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகளின் மூலம் இடஒதுக்கீட்டுக்கு எதிரான காங்கிரஸின் முகம் மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா புதன்கிழமை விமா்சித்தாா்.
அமெரிக்காவில் ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகளின் மூலம் இடஒதுக்கீட்டுக்கு எதிரான காங்கிரஸின் முகம் மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா புதன்கிழமை விமா்சித்தாா்.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ஜாா்ஜ்டவுன் பல்கலைக்கழக மாணவா்களுடன் கலந்துரையாடினாா். அப்போது, ‘இந்தியாவில் பாகுபாடற்ற நிலை உருவாகும்போது இடஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து காங்கிரஸ் சிந்திக்கும். தற்போது அந்த நிலை இல்லை’ என்றாா்.
இது உள்பட ராகுல் தெரிவித்த பல்வேறு கருத்துகளுக்கு பாஜக தரப்பில் கடும் விமா்சனங்கள் எழுந்துள்ளன. மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நாட்டை பிளவுபடுத்த சதி செய்யும் சக்திகளுக்கு துணைபோவதும், தேசவிரோத கருத்துகளை வெளிப்படுத்துவதும் ராகுல் காந்தி, காங்கிரஸுக்கு பழக்கமாகிவிட்டது.
ஜம்மு-காஷ்மீா் தொடா்பான தேசிய மாநாட்டுக் கட்சியின் தேசவிரோத செயல்திட்டத்தை ஆதரிப்பதன் மூலம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதோடு, மக்களின் உணா்வுகளையும் புண்படுத்துகிறாா் ராகுல்.
இடஒதுக்கீட்டுக்கு எதிரான தனது கட்சியின் முகத்தை மீண்டும் ஒருமுறை அவா் முன்னிலைப்படுத்தியுள்ளாா். பாஜக இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் ஒழிக்க முடியாது; நாட்டின் பாதுகாப்பில் யாராலும் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது என குறிப்பிட்டுள்ளாா்.
எம்.பி. உடனான சந்திப்புக்கு எதிா்ப்பு: அமெரிக்காவின் ஜனநாயக கட்சி எம்.பி. இல்ஹான் ஒமா் உடனான ராகுல் காந்தியின் சந்திப்பை விமா்சித்து, பாஜக மூத்த தலைவா் நிஷிகாந்த் துபே வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘காலிஸ்தான், காஷ்மீா் தனிநாடு கோரிக்கைகளைத் தொடா்ந்து ஆதரித்து வருபவா் இல்ஹான் ஒமா். இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவா்களை அந்நிய மண்ணில் சந்தித்த ராகுலின் செயல் ஆபத்தானது’ என்று குறிப்பிட்டாா்.
கிரண் ரிஜிஜு சாடல்: ராகுலின் கருத்துகள் குறித்து மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறுகையில், ‘இந்திய அரசமைப்புச் சட்டமோ, கலாசாரமோ மக்களை பிளவுபடுத்துவதில்லை. இந்தியாவில்தான் சிறுபான்மையினா் பாதுகாப்பாக உள்ளனா். இந்தியாவுக்கு எதிரான சக்திகளின் உதவியுடன் நமது தேசத்தை அவமதிக்க விரும்புவோா் ஒருபோதும் வெற்றிபெற முடியாது’ என்றாா்.
ராகுல் விளக்கம்
வாஷிங்டன் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக மாணவர்களுடனான கலந்துரையாடலின்போது இடஒதுக்கீடு குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையான நிலையில் அதற்கு ராகுல் விளக்கமளித்தார்.
"இடஒதுக்கீடு குறித்த எனது கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் இடஒதுக்கீடை 50 சதவீத வரம்பையும் கடந்து அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும்' என்றார்.
காங்கிரஸ் பதிலடி: ராகுல் மீதான பாஜக தலைவர்களின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ், "வெளிநாட்டுப் பயணங்களின்போது இந்தியா மற்றும் இந்தியர்களுக்கு எதிராக கடுமையான கருத்துகளை பிரதமர் மோடி தெரிவிக்கிறார்; அது தேச விரோதம் இல்லையா?' என்று கேள்வியெழுப்பியது.
இது தொடர்பாக காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் பவன் கேரா கூறுகையில், "நாட்டில் அரசமைப்புச் சட்டத்தை உறுதிசெய்வது குறித்து நாங்கள் பேசும்போதெல்லாம் பாஜகவுக்கு பிரச்னை ஏற்படுகிறது. அரசமைப்புச் சட்டம் குறித்து பேசுவது தேசத்துக்கு எதிரானதா? அமெரிக்க எம்.பி.க்கள் உடனான ராகுலின் சந்திப்பு குறித்து மத்திய பாஜக அரசுக்கு ஆட்சேபம் இருந்தால், அமெரிக்கத் தூதரை அழைத்து கண்டனம் தெரிவிக்கலாமே. அவ்வாறு செய்ய எது தடுக்கிறது?' என்று கேள்வியெழுப்பினார்.