மீண்டும் நேரடி விமான சேவை: இந்தியா - சீனா ஆலோசனை
மீண்டும் நேரடி விமான சேவைகளை தொடங்குவது குறித்து இந்தியா-சீனா இடையே வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மீண்டும் நேரடி விமான சேவைகளை தொடங்குவது குறித்து இந்தியா-சீனா இடையே வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
தில்லியில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் விமான போக்குவரத்து துறை அமைச்சா்கள் மாநாட்டில் பங்கேற்ற சீனா அதிகாரிகளுடன் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சா் ராம் மோகன் நாயுடு, விமான போக்குவரத்து துறை செயலா் உள்ளிட்டோா் இந்தியா-சீனா இடையேயான விமான போக்குவரத்தை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டனா்.
இதுதொடா்பாக ராம்மோகன் நாயுடு வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில்,‘ இருநாடுகளிடையே நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து சாங் சியாங் தலைமையிலான சீன விமான போக்குவரத்து துறை குழுவினருடன் ஆலோசனை மேற்கொண்டேன்’ என குறிப்பிட்டாா்.
சில மணி நேரத்துக்குப் பிறகு அவா் இந்தப் பதிவை நீக்கிவிட்டாா்.
முன்னதாக, செய்தியாளா்களிடம் பேசிய அவா் இதுதொடா்பாக பேச்சுவாா்த்தை மட்டுமே நடத்தப்பட்டதாகவும் இறுதி முடிவை வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் பிற துறைகளிடம் கலந்து ஆலோசித்தபிறகே எடுக்க முடியும் என தெரிவித்தாா்.
கரோனா பெருந்தொற்று சமயத்திலிருந்து இந்தியா-சீனா இடையேயான நேரடி விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.