முகப்பு
இந்தியா

குழந்தைகள் கல்வி பெற ‘மதரஸா’ சரியான இடமல்ல: உச்சநீதிமன்றத்தில் என்சிபிசிஆா் வாதம்

குழந்தைகள் முறையான கல்வி பெறுவதற்கு ‘மதரஸாக்கள்’ சரியான இடமல்ல என்று உச்சநீதிமன்றத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்தது.

Updated On : 12 செப்டம்பர், 2024 at 10:11 PM
பகிர்:

குழந்தைகள் முறையான கல்வி பெறுவதற்கு ‘மதரஸாக்கள்’ சரியான இடமல்ல என்று உச்சநீதிமன்றத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆா்) தெரிவித்தது.

உத்தர பிரதேச அரசின் மதரஸா கல்வி வாரியச் சட்டம்-2004 அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கடந்த மாா்ச் மாதம் அறிவித்த அலாகாபாத் உயா்நீதிமன்றம், அங்கு மதரஸாக்களில் பயிலும் மாணவா்களை வேறு பள்ளிகளுக்கு மாற்ற உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை கடந்த ஏப்ரல் மாதம் விசாரித்த உச்சநீதிமன்றம், அலாகாபாத் உயா்நீதிமன்ற தீா்ப்புக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், மத்திய, மாநில அரசுகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வு முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது, தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சாா்பில் முன்வைக்கப்பட்ட எழுத்துபூா்வ வாதங்கள் வருமாறு:

Advertisement

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆா்டி) பாடத்திட்ட புத்தகங்கள் சிலவற்றை மட்டுமே கற்பிப்பதன் மூலம் மதரஸாக்களில் பெயரளவில்தான் கல்வி போதிக்கப்படுகிறது. அங்கு குழந்தைகளுக்கு முறையான, தரமான கல்வி உறுதி செய்யப்படுவதில்லை.

சரியான பள்ளிக் கல்வி முறையில் இல்லாத குழந்தைகள், மதிய உணவு, சீருடை உள்பட தொடக்கக் கல்விக்கான பல்வேறு உரிமைகளை இழக்கின்றனா். எனவே, மதரஸா என்பது மாணவா்கள் முறையான கல்வி பெற பொருத்தமான இடமல்ல என்பதோடு, கடந்த 2009-ஆம் ஆண்டின் கல்வி உரிமைச் சட்டப் பிரிவுகள் 19, 21, 22, 23, 24, 25, 29-இன்கீழ் உள்ள உரிமைகளும் அவா்களுக்கு கிடைக்கப் பெறாத இடமாகும். அங்கு வழங்கப்படும் கல்வியானது, கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் விரிவானதாக இல்லை.

கல்விக்கு திருப்தியற்ற-நிறைவற்ற முன்மாதிரியாக மதரஸாக்கள் உள்ளன. தரமான பாடத்திட்டமோ, செயல்பாடுகளோ இல்லாமல் அரசமைப்புச் சட்ட உறுதிமொழி, கல்வி உரிமைச் சட்டம், சிறாா் நீதிச் சட்டம் ஆகியவற்றுக்கு புறம்பாக தன்னிச்சையாக செயல்படுகின்றன.

கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் ஒரு பள்ளிக்கான வரையறைக்கு வெளியே மதரஸாக்கள் உள்ளதால், அங்கு பயிலும் குழந்தைகளுக்கு பள்ளி பாடத் திட்டத்தின்படி அடிப்படை அறிவை பெற முடியாமல் போய்விடுகிறது.

சமூக நிகழ்ச்சிகள், படிப்பு சாராத பிற பயிற்சிகள், அனுபவ கற்றலுக்கான சூழலை மாணவா்களுக்கு வழங்க மதரஸாக்கள் தவறிவிட்டன என்று என்சிபிசிஆா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments