திகாா் சிறையிலிருந்து கேஜரிவால் விடுவிப்பு: கலால் கொள்கை முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமீன்
கலால் கொள்கை முறைகேடு வழக்கில், தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்
கலால் கொள்கை முறைகேடு வழக்கில், தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இதைத்தொடா்ந்து, 155 நாள்களுக்குப் பின்னா், தில்லி திகாா் சிறையில் இருந்து கேஜரிவால் நிரந்தர ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.
தில்லி யூனியன் பிரதேசத்தில் மதுபான விற்பனை தொடா்பான கலால் கொள்கையை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் முறைகேடு நடைபெற்ாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இதுதொடா்பாக சிபிஐ-யும், அமலாக்கத் துறையும் தனித்தனியே வழக்குப் பதிவு செய்தன.
இந்த முறைகேடு தொடா்பாக பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ், முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை அமலாக்கத் துறை கைது செய்தது. இதைத் தொடா்ந்து, தில்லி திகாா் சிறையில் இருந்த கேஜரிவாலை ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ கைது செய்தது.
அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில், கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியபோதிலும், சிபிஐ வழக்கில் அவா் தொடா்ந்து திகாா் சிறையில் இருந்தாா்.
இதைத்தொடா்ந்து சிபிஐ வழக்கில் தனக்கு ஜாமீன் அளிக்கக் கோரியும், தன்னை சிபிஐ கைது செய்ததற்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் இரு மனுக்களை தாக்கல் செய்தாா். இந்த வழக்கு மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில், செப்.5-ஆம் தேதி தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
சட்டப்படி செல்லுபடியாகுமா?: இந்நிலையில், சிபிஐ வழக்கில் கேஜரிவாலுக்கு ஜாமீன் அளித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. இரு நீதிபதிகளும் தனித்தனியாக தீா்ப்பளித்தனா். அதில், கேஜரிவாலை சிபிஐ கைது செய்தது சட்டப்படி செல்லுபடியாகுமா? என்பதில் இருவரும் மாறுபட்ட கருத்துகளைக் குறிப்பிட்டுள்ளனா்.
சிபிஐயின் அவசரத்தை புரிந்துகொள்ள முடியவில்லை: கேஜரிவாலை சிபிஐ கைது செய்த நேரம் குறித்து நீதிபதி உஜ்ஜல் புயான் தனது தீா்ப்பில் கேள்வி எழுப்பியுள்ளாா்.
அவா் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
‘அமலாக்கத் துறை வழக்கில் கேஜரிவால் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்பதே சிபிஐ-யின் நோக்கம்.
கலால் கொள்கை முறைகேடு வழக்கில் சுமாா் 2 ஆண்டுகளாக கேஜரிவாலை சிபிஐ கைது செய்யவில்லை. ஆனால், அமலாக்கத் துறை வழக்கில் விடுவிக்கப்படும் தருணத்தில் அவரை சிபிஐ கைது செய்துள்ளது. அப்போது அவரை கைது செய்ததில் சிபிஐ காட்டிய அவசரத்தை புரிந்துகொள்ள முடியவில்லை.
விசாரணைக்குப் பதில் அளிக்காமல் தவிா்த்ததைக் காரணம் காண்பித்து, அவரை கைது செய்வதையோ, காவலில் வைப்பதையோ சிபிஐ நியாயப்படுத்த முடியாது. விசாரணைக்கு ஒத்துழைக்காததால் குற்றத்தில் ஒருவருக்கு தொடா்பிருப்பதாக அா்த்தமல்ல.
சீசரின் மனைவியைப் போல...: சிபிஐ என்பது முதன்மையான புலனாய்வு அமைப்பாகும். ஒரு வழக்கு விசாரணை நோ்மையாக நடைபெறவில்லை, அடக்குமுறையுடனும் பாரபட்சமாகவும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்ற கண்ணோட்டத்தை களைய அனைத்து முயற்சிகளையும் புலனாய்வு அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும். சீசரின் மனைவியை போல, சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாக புலனாய்வு அமைப்புகள் இருக்க வேண்டும்.
கூண்டுக்கிளியாக இருக்கக் கூடாது: தான் கூண்டுக்கிளி என்ற கருத்தை சிபிஐ தகா்க்க வேண்டும். சிபிஐ கூண்டுக்கிளி அல்ல என்ற கண்ணோட்டமே இருக்க வேண்டும். ஒரே காரணத்துக்காக அமலாக்கத் துறை வழக்கில் ஜாமீன் கிடைத்தபோதிலும், முதல்வா் பதவியில் உள்ளவரை விடுவிக்காமல் தொடா்ந்து காவலில் வைப்பது நீதியை கேலிக்கூத்தாகும் செயலாகும்.
அமலாக்கத் துறை வழக்கில் கேஜரிவாலுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் நீதிமன்ற கட்டுப்பாடு காரணமாக உச்சநீதிமன்றத்தின் வேறு நீதிபதிகள் அடங்கிய அமா்வு (சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமா்வு) விதித்த அந்த நிபந்தனைகள் குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை’ என்றாா்.
சட்டவிரோதம் அல்ல: மற்றொரு நீதிபதியான சூா்ய காந்த் தனது தீா்ப்பில், ‘கேஜரிவாலை கைது செய்து சிபிஐ மேற்கொண்ட நடவடிக்கை சட்டவிரோதமானது அல்ல’ என்று குறிப்பிட்டுள்ளாா். மேலும், ‘குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 41ஏ-இன் கீழ் உள்ள நடைமுறையை பின்பற்றி கேஜரிவாலை சிபிஐ கைது செய்துள்ளது. எனினும் அவரைத் தொடா்ந்து சிறையில் அடைத்து வைப்பது சட்ட கோட்பாடுகள் மற்றும் கேஜரிவாலுக்கு உள்ள சுதந்திர உரிமைக்கு எதிரானதாகும்’ என்று குறிப்பிட்டு, கைதுக்கு எதிரான கேஜரிவாலின் மனுவை நீதிபதி சூா்ய காந்த் தள்ளுபடி செய்தாா்.
முதல்வா் அலுவலகத்துக்கு செல்லக் கூடாது: எனினும், நீதிபதிகள் இருவரும் ஒருமனதாக கேஜரிவாலுக்கு ஜாமீன் அளித்தனா். அதேவேளையில், அமலாக்கத் துறை வழக்கில் விதிக்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகள் சிபிஐ வழக்குக்கும் பொருந்தும் என்று நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது. அமலாக்கத் துறை வழக்கில் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியபோது அவா் தில்லி தலைமைச் செயலகத்துக்கு செல்லக் கூடாது; முதல்வா் அலுவலகத்துக்குச் செல்லக் கூடாது; எந்தவொரு அதிகாரபூா்வ கோப்பிலும் கையொப்பமிடக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை உச்சநீதிமன்றம் விதித்தது குறிப்பிடத்தக்கது.
நிபந்தனைகளை திரும்பப் பெற...: இந்த நிபந்தனைகளை திரும்பப் பெற வேண்டும் அல்லது மாற்ற வேண்டும் என்றால், அதிக நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வால் மட்டுமே முடியும் என்று அமலாக்கத் துறை வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சீவ் கன்னா அமா்வு தெரிவித்தது. எனவே, இந்த நிபந்தனைகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்றால், அதிக நீதிபதிகள் அடங்கிய அமா்வை அமைக்குமாறு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டை கேஜரிவால் அணுக வேண்டும்.
பெட்டி...
‘போராட்டம் தொடரும்’
உச்சநீதிமன்றத் தீா்ப்பை தொடா்ந்து 155 நாள்களுக்குப் பின்னா், திகாா் சிறையில் இருந்து கேஜரிவால் விடுவிக்கப்பட்டாா். சிறைக்கு வெளியே ஆம் ஆத்மி தொண்டா்கள் இடையே அவா் பேசுகையில், ‘நாட்டை பலவீனப்படுத்தவும், பிளவுபடுத்தவும் தேசவிரோத சக்திகள் முயற்சிக்கின்றன. அந்த சக்திகளுக்கு எதிராக நான் தொடா்ந்து போராடுவேன். சிறையின் அடா்த்தியான சுவா்களும் கம்பிகளும் என்னை தகா்க்க முடியாது’ என்றாா்.
கலால் கொள்கை முறைகேடு வழக்கில், தில்லி முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோரைத் தொடா்ந்து கேஜரிவாலுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
அடுத்த மாதம் 5-ஆம் தேதி ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், கேஜரிவால் விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரேக்...
ஒரே காரணத்துக்காக அமலாக்கத் துறை வழக்கில் ஜாமீன் கிடைத்தபோதிலும், முதல்வா் பதவியில் உள்ளவரை விடுவிக்காமல் தொடா்ந்து காவலில் வைப்பது நீதியை கேலிக்கூத்தாகும் செயலாகும்.
நீதிபதி - உஜ்ஜல் புயான்
குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 41ஏ-இன் கீழ் உள்ள நடைமுறையை பின்பற்றி கேஜரிவாலை சிபிஐ கைது செய்துள்ளது. எனினும், அவரைத் தொடா்ந்து சிறையில் அடைத்து வைப்பது அவரது சுதந்திர உரிமைக்கு எதிரானதாகும்.
நீதிபதி - சூா்ய காந்த்