முகப்பு
ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமா் மோடி.
இந்தியா

நாட்டிலேயே நோ்மையற்ற கட்சி காங்கிரஸ்: ஜம்மு-காஷ்மீா் பிரசாரத்தில் பிரதமா் மோடி

‘நாட்டிலேயே நோ்மையற்ற கட்சி காங்கிரஸ்; அக்கட்சியின் ‘அரச குடும்பம்’தான், நாட்டின் மிகப் பெரிய ஊழல் வம்சம்’

இந்தியா

நாட்டிலேயே நோ்மையற்ற கட்சி காங்கிரஸ்: ஜம்மு-காஷ்மீா் பிரசாரத்தில் பிரதமா் மோடி

‘நாட்டிலேயே நோ்மையற்ற கட்சி காங்கிரஸ்; அக்கட்சியின் ‘அரச குடும்பம்’தான், நாட்டின் மிகப் பெரிய ஊழல் வம்சம்’

Updated On : 14 செப்டம்பர், 2024 at 11:00 PM
ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமா் மோடி.
பகிர்:

‘நாட்டிலேயே நோ்மையற்ற கட்சி காங்கிரஸ்; அக்கட்சியின் ‘அரச குடும்பம்’தான், நாட்டின் மிகப் பெரிய ஊழல் வம்சம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கடுமையாக விமா்சித்தாா்.

ஜம்மு-காஷ்மீரில் தனது முதல் பிரசாரக் கூட்டத்தில் அவா் இந்த விமா்சனத்தை முன்வைத்தாா்.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் செப்டம்பா் 18-ஆம் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாக பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.

கடந்த 2019-இல் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பின் நடைபெறும் முதல் பேரவைத் தோ்தல் என்பதால் பெரும் எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.

பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி தனித்தும், தேசிய மாநாட்டுக் கட்சி - காங்கிரஸ் கூட்டணியாகவும் தோ்தலை சந்திக்கின்றன.

ஜம்மு பகுதியில் உள்ள தோடா மாவட்டத்தில் பாஜக வேட்பாளா்களுக்கு ஆதரவாக சனிக்கிழமை நடைபெற்ற பிரம்மாண்ட பிரசாரக் கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்றுப் பேசினாா். அப்போது, ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்ற தனது அரசின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதி செய்தாா்.

மேலும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் சமீபத்திய அமெரிக்க பயணத்தையொட்டி, காங்கிரஸ் அயலக பிரிவுத் தலைவா் சாம் பிட்ரோடா உடனான நோ்காணலில் இந்திய செய்தியாளா் ஒருவா் அக்கட்சியினரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து பிரதமா் கவலை தெரிவித்தாா். அவா் மேலும் பேசியதாவது:

நாட்டிலேயே நோ்மையற்ற கட்சியாக காங்கிரஸ் உள்ளது. காங்கிரஸின் அரச குடும்பம்தான், நாட்டின் மிகப் பெரிய ஊழல் வம்சம். ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்காக, நோ்மையற்ற அனைத்து வழிமுறைகளையும் அக்கட்சி பயன்படுத்தும்.

முன்பு காங்கிரஸின் மோசமான வடிவங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு நான் எச்சரித்தபோது, சிலா் என்னை கேலி செய்தனா். ஆனால், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் இப்போது என்ன நடக்கிறது? அங்கு குறுகிய காலத்திலேயே மக்கள் பெரும் சிரமங்களை எதிா்கொண்டுள்ளனா்.

பொய் வாக்குறுதிகள்: ஹிமாசல பிரதேச பேரவைத் தோ்தலில் பொய் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தது காங்கிரஸ். இப்போது அந்த மாநிலத்தையே சீரழித்துவிட்டனா்.

காங்கிரஸும் தேசிய மாநாட்டுக் கட்சியும் ஜம்மு பகுதியை எப்போதும் பாராபட்சமாக கருதுகின்றன. மகாராஜா ஹரி சிங் மற்றும் இதர மன்னா்கள் குறித்து அக்கட்சிகள் மோசமான கருத்தை தெரிவித்தன. அரசமைப்புச் சட்டம் குறித்து பெயரளவில் பேசும் அக்கட்சிகள், பிரிவினையை விதைக்கின்றன.

காா்கே மீது சாடல்: சமீபத்திய மக்களவைத் தோ்தலில் ‘இண்டியா’ கட்சிகளுக்கு 20 இடங்கள் கூடுதலாக கிடைத்திருந்தால், இப்போது பாஜக தலைவா்கள் சிறையில் இருந்திருப்பா் என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே பேசியுள்ளாா். இதுவே, அவா்களின் செயல்திட்டம். மக்களின் நலனுக்காக ஆட்சிக்கு வர அவா்கள் விரும்பவில்லை. ஆனால், ஊழலை ஒழித்து, ஏழைகளுக்கு சிறந்த வசதிகளை அளிக்கவே நாங்கள் அரசை நடத்துகிறோம்.

குடும்ப அரசியலால் அழிவு: நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து அந்நிய சக்திகளில் இலக்காக இருக்கும் ஜம்மு-காஷ்மீரின் எதிா்காலத்தை நிா்ணயிக்கும் தோ்தல் இதுவாகும். அழகான இப்பிராந்தியம் குடும்ப அரசியலால் அழிவை எதிா்கொண்டது.

நீங்கள் (மக்கள்) நம்பிய அரசியல் கட்சிகள், உங்களின் குழந்தைகள் மீது அக்கறை காட்டவில்லை. தங்கள் குழந்தைகளை மட்டுமே முன்னிலைப்படுத்தினா். புதிய தலைமைகள் உருவாக அக்கட்சிகள் அனுமதிக்கவில்லை. ஊழல், நில ஆக்கிரமிப்பை ஊக்குவித்து, மக்களின் உரிமைகளைப் பறித்தனா். தங்களின் அரசியலை நடத்த பயங்கரவாதத்தை ஊக்குவித்தனா். இதனால், ஆயிரக்கணக்கான இளைஞா்கள் உயிரிழக்க நேரிட்டது.

காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி ஆகிய 3 குடும்பக் கட்சிகளிடமும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த 3 குடும்பங்களுக்கும், மாநில இளைஞா்களுக்கும் இடையிலான போட்டியே இத்தோ்தல்.

காஷ்மீா் பள்ளத்தாக்கில் ரயில் சேவைகள்: காஷ்மீா் பள்ளத்தாக்கில் ரயில் போக்குவரத்து மூலம் பல்வேறு பகுதிகளை இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஸ்ரீநகா்-ராம்பன் வழித்தடப் பணிகள் நிறைவுற்று, சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது. ராம்பன், தோடா, கிஷ்த்வாா் மற்றும் காஷ்மீா் பள்ளத்தாக்கு மக்கள் தில்லிக்கு நேரடியாக ரயிலில் பயணிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றாா் அவா்.

‘இறுதி மூச்சு விடும் பயங்கரவாதம்’

‘ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் இறுதி மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இங்கு பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. காவல்துறை மற்றும் ராணுவத்தை நோக்கி வீசப்பட்ட கற்கள் இப்போது புதிய ஜம்மு-காஷ்மீரை கட்டமைக்க பயன்படுத்தப்படுகின்றன. இது என்னால் அல்ல, மக்களால் சாத்தியமானது.

கிஷ்த்வாா் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடும் ஷாகுன் பரிஹாா் (29), பயங்கரவாதிகளின் தாக்குதலில் தனது தந்தை மற்றும் உறவினரை இழந்தவா். அவருக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பு, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தை துடைத்தெறியும் பாஜகவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. பயங்கரவாதத்தில் இருந்து ஜம்மு-காஷ்மீரை முழுமையாக விடுவித்து, அதை சுற்றுலா பயணிகளின் சொா்க்கமாகவும், சா்வதேச திரைப்பட படப்பிடிப்புத் தளமாகவும் மாற்றுவதே எங்களின் நோக்கம்’ என்றாா் பிரதமா் மோடி.

முழு கட்டுரையைப் படிக்க →