தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். தில்லி ஆளுநர் வி.கே. சக்சேனாவிடம் கேஜரிவால் தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தார்.
முதல்வராக பொறுப்பேற்கவுள்ள அதிஷி ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் கைதான முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது. எனினும் அவர் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார்.
முன்னதாக, தில்லியின் அடுத்த முதல்வரை தேர்ந்தெடுக்கும்பொருட்டு இன்று(செவ்வாய்க்கிழமை) காலை ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் தில்லியின் புதிய முதல்வராக அதிஷி ஒருமனதாக தேர்வு. செய்யப்பட்டுள்ளார். அடுத்தாண்டு தில்லி சட்டப்பேரவை தேர்தல் வரை அதிஷி முதல்வராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஏற்கெனவே திட்டமிட்டபடி ஆளுநர் வி.கே. சக்சேனாவை சந்திக்க ஆளுநர் மாளிகைக்கு முதல்வர் கேஜரிவால் சென்றார். அவருடன் புதிய முதல்வராக பதவியேற்கவுள்ள அதிஷியும் சென்றுள்ளார்.
கேஜரிவால் தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார். அதேபோல, அதிஷி முதல்வராக பொறுப்பேற்க, சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஒப்புதல் கடிதத்தை வழங்கி ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
இதையடுத்து விரைவில் தில்லியின் புதிய முதல்வராக அதிஷி பொறுப்பேற்பார்.
தற்போது தில்லி கல்வித்துறை அமைச்சராக உள்ள அதிஷி, இதன் மூலமாக தில்லியின் 8 ஆவது முதலமைச்சர் ஆகிறார். மேலும் சுஷ்மா சுவராஜ், ஷீலா தீட்சித்தைத் தொடர்ந்து மூன்றாவது பெண் முதல்வர் எனும் பெருமையை அதிஷி பெறுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.