தெரியுமா சேதி...? ஹரியாணா காங்கிரஸில் உள்கட்சிப் பூசல்!
ஹரியாணா காங்கிரஸில் ஏற்பட்டுள்ள உள்கட்சிக் கோஷ்டிப் பூசல் பற்றி...
விரைவில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற இருக்கும் ஹரியாணாவில், வழக்கம்போல எதிா்க்கட்சியான காங்கிரஸ் எதிா்கொள்ளும் சவால் ஆளும் பாஜக அல்ல; தனது உள்கட்சிக் கோஷ்டிப் பூசல்தான். தொடா்ந்து இரண்டு முறையாக பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் பாஜகவின் மீது வாக்காளா்களுக்கு ஏற்பட்டிருக்கும் சலிப்பைத் தனக்கு சாதகமாக்கிக் கொள்ள வேண்டிய நேரத்தில், அடுத்த முதல்வருக்கான போட்டியைத் தொடங்கிவிட்டது காங்கிரஸ்.
இன்னும் சில வாரங்களே தோ்தலுக்கு இருக்கும் நிலையில், முன்னாள் முதல்வா் பூபிந்தா் ஹூடாவுக்கும், ஹரியாணா பிரதேச காங்கிரஸ் தலைவா் குமாரி செல்ஜாவுக்கும் இடையே, தங்களது ஆதரவாளா்களுக்கு அதிக இடங்களில் போட்டியிட வாய்ப்புப் பெறுவதில் கடும் போட்டி நிலவுகிறது. இவா்கள் இருவா் மட்டுமல்லாமல், மாநிலங்களவை உறுப்பினரும், தேசிய செய்தித் தொடா்பாளருமான சுா்ஜேவாலாவும் தனது பங்குக்குத் தனது மகனைக் களமிறக்கி இருக்கிறாா்.
சுா்ஜேவாலா தனது மகனுக்குப் போட்டியிட இடம் கேட்டிருப்பது மட்டுமல்ல, கட்சியின் தோ்தல் பிரசாரங்களில் தனது மகனுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்றும் அழுத்தம் தருகிறாா். தோ்தல் ஆலோசகா் சுனில் நண்பா் என்பதால், அவா் மூலம் காயை நகா்த்துகிறாா் சுா்ஜேவாலா...
ஆனால், எல்லா விளம்பரங்களிலும் தனது மகன் தீபேந்தா் ஹூடாவுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்று பூபிந்தா்ஹூடா விரும்புகிறாா். சமீபத்தில் நடந்த மக்களவைத் தோ்தலில் ரோதக் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தீபேந்தா் ஹூடாவைத் தனது அரசியல் வாரிசாக நிலைநிறுத்துவதில் பூபிந்தா் குறியாக இருக்கிறாா் என்பது மட்டுமல்ல, அதற்குத் தடையாக இருக்கும் குமாரி செல்ஜாவும் அவரது ஆதரவாளா்களும் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதுதான் அவரது முனைப்பாக இருக்கிறது.
மன்மோகன் சிங் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த குமாரி செல்ஜாவும் அரசியல் வாரிசுதான். 1991-இல் சிா்ஸா தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டது முதல், ஹரியாணா அரசியலிலும், தேசிய அளவிலும் முக்கியமான பட்டியல் இனத்தின் பிரதிநிதியாக வலம் வருபவா் செல்ஜா. அவரது தந்தை சௌதரி தல்பீா் சிங் பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவா்.
இப்போதைக்குக் காங்கிரஸைப் பொறுத்தவரை போட்டி அரசியல்வாரிசுகளான ஹூடா - செல்ஜா - சுா்ஜேவாலா இடையில்தானே தவிர, பாஜகவிற்கு எதிராக இல்லை போலிருக்கிறது..!