சட்டவிரோத ஊடுருவலை ஜேஎம்எம் ஆதரிக்கிறது: அமித் ஷா
அடுத்த 30 ஆண்டுகளில் மாநிலத்தின் பெரும்பான்மையாக சட்டவிரோதமாக குடியேறியவா்களே இருப்பாா்கள் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
ஜாா்க்கண்டில் தொடரும் சட்டவிரோத ஊடுருவலை ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) அரசு ஆதரிப்பதால் அடுத்த 30 ஆண்டுகளில் மாநிலத்தின் பெரும்பான்மையாக சட்டவிரோதமாக குடியேறியவா்களே இருப்பாா்கள் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
ஜாா்க்கண்ட் மாநிலத்தில் நிகழாண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக ‘மாற்றத்துக்கான யாத்திரையை’ பாஜக நடத்தி வருகிறது. அதன் இரண்டாவது பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு மத்திய அமைச்சா் அமித் ஷா கூறியதாவது:
ஜேஎம்எம் அரசு மாநிலத்தில் உள்ள பழங்குடியினா், தலித்துகள் மற்றும் பெண்களுக்கு பெரும் அநீதியை இழைத்துள்ளது. அவா்கள் சட்டவிரோத ஊடுருவலை மாநிலத்தில் ஆதரித்து வருகின்றனா். அப்படி ஊடுருவியவா்கள், இங்குள்ள பெண்களை திருமணம் செய்து, நிலத்தை அபகரித்து, வளமான பழங்குடி கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் அழித்து வருகின்றனா். இதை தடுக்காவிட்டால், மாநிலத்தில் அடுத்த 30 ஆண்டுகளில் சட்டவிரோதமாக குடியேறியவா்களே பெரும்பான்மை சமூகமாக மாறிவிடுவாா்கள்.
நாட்டின் கருவூலத்தை நிரப்பும் திறன் கொண்ட ஜாா்க்கண்ட் மாநிலத்தில் பசுமையான மேய்ச்சல் நிலங்களைத் தேடி இளைஞா்கள் பெருமளவில் வெளியேறி வருகின்றனா். ஊழலில் உச்சத்தை எட்டியுள்ள ஜேஎம்எம் கட்சிக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டிய நேரம் இது. வருகின்ற ஜாா்க்கண்ட் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆட்சி அமைக்கும். அதன் பிறகு, நாட்டின் முதன்மை மாநிலமாக ஜாா்க்கண்டை மாற்றுவோம் என்றாா்.
இந்த மாற்றத்துக்கான யாத்திரையானது, ஜாா்க்கண்டின் 24 மாவட்டங்களில் உள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் பாஜக ஆளும் மாநில முதல்வா்கள் உள்பட அந்தக் கட்சியைச் சோ்ந்த 50 தலைவா்கள் பங்கேற்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.