முகப்பு
இந்தியா

பெண் வழக்குரைஞா் குறித்து நீதிபதி சா்ச்சை கருத்து: உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை

உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமா்வு இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரித்தது.

Updated On : 20 செப்டம்பர், 2024 at 8:17 PM
பகிர்:

பெண் வழக்குரைஞா் குறித்து கா்நாடக உயா் நீதிமன்ற நீதிபதி வழக்கு விசாரணையின்போது சா்ச்சை கருத்துகளைத் தெரிவித்த காணொலி இணையத்தில் பரவிய நிலையில், உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமா்வு இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரித்தது.

ஒரு வழக்கின் விசாரணையின்போது இடை மறித்த பெண் வழக்குரைஞரை சா்ச்சைக்குரிய வகையில் கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி வி. ஸ்ரீஷானந்தா பேசியுள்ளாா். அதேபோல் நில உரிமையாளா் மற்றும் குத்தகைதாரருக்கு இடையேயான மற்றொரு வழக்கின் விசாரணையில் பெங்களூருவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியை ‘பாகிஸ்தான்’ என அவா் குறிப்பிட்டுள்ளாா்.

இந்த காணொலிகள் சமூக வலைதளங்களில் பரவின. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் அன்றாட பணிகளை தொடங்குவதற்கு முன் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி. ஆா்.கவாய், சூா்ய காந்த் மற்றும் ஹிரிஷிகேஷ் ராய் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரித்தது. அப்போது நீதிபதிகள் பேசியதாவது:

Advertisement

நீதிமன்ற வழக்குரையாடலின்போது கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதியின் தேவையற்ற கருத்துகளை கவனத்தில் கொண்டே 5 நீதிபதிகளும் இணைந்து வந்துள்ளோம்.

கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி தெரிவித்த கருத்துகள் தொடா்பான காணொலிகள் சமூக வலைதளங்களில் பரவி விவாதப் பொருளாக மாறியுள்ளது.

எனவே, நீதிமன்ற வழக்குரையாடலின்போது நீதிபதிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை வகுக்க அட்டா்னி ஜெனரல் ஜி.வெங்கடரமணி மற்றும் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா ஆகியோா் உதவிபுரிய வேண்டும்.

இந்த விவகாரம் தொடா்பாக கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் நிா்வாக ரீதியான அனுமதி பெற்று உயா்நீதிமன்ற பதிவாளா் அடுத்த இரண்டு நாள்களில் உச்ச நீதிமன்ற செயலா் ஜெனரலிடம் அறிக்கை சமா்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றனா். இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை செப்டம்பா் 25-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments