ஒடிஸா மாநிலம், புரியில் அமைந்துள்ள ஜெகந்நாதர் கோயிலின் ரகசிய அறையில் இரண்டாம் கட்ட ஆய்வை தொல்பொருள் ஆய்வுத் துறை சனிக்கிழமை தொடங்கியது.
புரி ஜெகந்நாதர் கோயிலில் ரத்ன பண்டார் என்ற பெயரிலான ரகசிய அறைகள் உள்ளன. அங்கு தொல்பொருள் ஆய்வுத் துறை அண்மையில் முதல்கட்ட ஆய்வை நடத்தியது. அப்போது ரகசிய அறைகளில் இருந்து எடுக்கப்பட்ட ஆபரணங்கள் உள்ளிட்ட அனைத்து மதிப்புவாய்ந்த பொருள்களையும் இக்கோயில் நிர்வாகம், கோயில் வளாகத்தில் உள்ள ஓர் அறையில் வைத்துப் பாதுகாத்து வருகிறது.
இந்நிலையில், ஜெகந்நாதர் கோயிலின் ரகசிய அறைகளில் இரண்டாம் கட்ட ஆய்வை தொல்பொருள் ஆய்வுத் துறை சனிக்கிழமை தொடங்கியது. மூன்று தினங்களுக்கு நடைபெற உள்ள இந்த ஆய்வை முன்னிட்டு கோயிலில் பக்தர்கள் மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை சுவாமி தரிசனம் செய்ய ஸ்ரீஜெகந்நாதர் கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்த ஆய்வையொட்டி கோயிலின் பிரதான வாயில்கள் மூடப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் ஒத்துழைப்பு வழங்குமாறு பக்தர்களை கோயில் நிர்வாகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான அரவிந்த பதி கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக ரத்ன பண்டார் பொருள் இருப்புக் குழுவின் தலைவரான நீதிபதி விஸ்வநாத் ரத் கூறியதாவது:
கோயிலில் உள்ள ரகசிய அறைகளில் தொல்பொருள் ஆய்வுத்துறை செப்டம்பர் 21, 22, 23 ஆகிய தேதிகளில் ஆய்வு மேற்கொள்ளும். இந்த ஆய்வின்போது ரத்ன பண்டாருக்கு உள்ளே மேலும் ஏதாவது ரகசிய அறைகள் உள்ளனவா என்று கண்டறியப்படும். இதற்காக தொல்பொருள் ஆய்வுத் துறையினர் அதிநவீன ரேடார் கருவியைக் கொண்டு வந்துள்ளனர் என்றார்.
ரகசிய அறைகளில் கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட ஆய்வில் தொல்பொருள் துறை கூடுதல் இயக்குநர் ஜானவிஜ் சர்மா தலைமையிலான 17 உறுப்பினர்கள் குழு கலந்து கொண்டது. அந்த ஆய்வின்போது கோயில் நிர்வாகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான அரவிந்த பாடி மற்றும் நீதிபதி விஸ்வநாத் ரத் ஆகியோர் முன்னிலையில் லேசர் ஸ்கேனிங் ஆய்வு நடத்தப்பட்டது.
தசரா மற்றும் கார்த்திகை மாதம் வர இருப்பதால் ஜெகந்நாதர் கோயிலில் தொழில்நுட்ப ஆய்வை செப்டம்பர் 24ஆம் தேதிக்குள் முடித்துக் கொள்ளுமாறு தொல்பொருள் ஆய்வுத் துறையை கோயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டது. அதேபோன்று குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் கோயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.