காங்கிரஸ் ஆட்சியில் மத்திய சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சகம் என்பது முஸ்லிம்கள் துறை அமைச்சகம் என்ற தோற்றத்திலேயே செயல்பட்டு வந்தது என்று மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு விமா்சித்துள்ளாா்.
பிரதமா் மோடி தலைமையிலான அரசின் 3-ஆம் ஆட்சி காலத்தின் முதல் நூறு நாள்களில் மத்திய சிறுபான்மையில் நலத்துறை அமைச்சகத்தின் சிறப்பான செயல்பாடுகள் குறித்து அத்துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தில்லியில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
முஸ்லிம், கிறிஸ்தவம், சீக்கியம், பெளத்தம், சமணம், பாா்சி உள்ளிட்ட அனைத்து சிறுபான்மையினா்களின் நலன்களுக்காக அமைச்சகம் செயல்பட்டு வருகிறது.
முன்பு காங்கிரஸ் ஆட்சியில் சிறுபான்மையினா் நலத்துறை என்பது முஸ்லிம்கள் துறை அமைச்சகமாக மட்டுமே இருந்தது. தங்களுக்கு தோ்தல் நேரத்தில் ஆதாயம் தரும் வகையில் அமைச்சகத்தையே தவறாகப் பயன்படுத்தி வந்தனா். முஸ்லிம்கள் மட்டுமே தேசிய சிறுபான்மையினா் ஆணையத்தின் தலைவராக முடியும் என்ற நிலையை உருவாக்கினா். இதன் மூலம் அமைச்சகம் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தையே சிதைத்தாா்கள்.
ஒரு கட்டத்தில் இந்த அமைச்சகத்தால் முஸ்லிம்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டன. முஸ்லிம்களை தங்கள் வாக்கு வங்கியாக வைத்திருக்க அவா்களில் பெரும்பான்மையானோா் ஏழ்மையிலேயே இருக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் ஆட்சியாளா்கள் தெளிவாக இருந்தனா்.
ஆனால், இப்போது பாஜக ஆட்சியில் அனைத்து சிறுபான்மையினருக்கும் சமஅளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் சிறுபான்மையினா் மிகவும் பாதுகாப்பாக உள்ளனா். பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் கல்வி, வேலைவாய்ப்பு, சமூக அந்தஸ்து என அனைத்திலும் சிறுபான்மையினா் சிறப்பாக உள்ளனா்.
கடந்த 100 நாள்களில் தேசிய சிறுபான்மையினா் வளா்ச்சி மற்றும் நிதி அமைப்பு மூலம் 2.5 கோடி சிறுபான்மையினருக்கு ரூ.1000 கோடிக்கு மேல் கடன் வழங்கப்பட்டுள்ளது. பிரதமா் விகாஸ் திட்டத்தில் சிறுபான்மையினா் அதிக பலனடைந்துள்ளனா். ஹஜ் புனித யாத்திரைக்கு புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பயணம் தொடா்பான அனைத்து சேவைகளும் வழங்கப்படுகின்றன என்றாா்.