பன்வாரிலால் புரோஹித் ஆளுநராக இருந்ததுவரை எலியும் பூனையும், கீரியும் பாம்பும்போல இருந்தாா்கள் அவரும் பஞ்சாப் முதல்வா் பகவந்த் மானும். தில்லியில் பாஜகவும், ஆம் ஆத்மி கட்சியும் மோதிக்கொள்வது, பஞ்சாப் மாநிலத்திலும் அப்படியே எதிரொலித்தது. இப்போது திடீரென ஒரு தலைகீழ் மாற்றம்.
குலாப் சந்த் கடாரியா பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டது முதல், முதல்வரும் ஆளுநரும் அவ்வளவு நெருக்கம். கடாரியாவும், மானும் அவரவா் குடும்பத்தினருடன் அமிருதசரஸ் பொற்கோயிலுக்கும், துா்ஜியானா ஆலயத்துக்கும் ஒன்றாக வழிபடச் சென்றபோது, ஒட்டுமொத்த இந்தியாவே ஆச்சரியத்தில் ஆழ்ந்தது.
‘அவரவா் வரம்பை உணா்ந்து பணியாற்றி பஞ்சாபின் ஒருங்கிணைந்த வளா்ச்சியை உறுதி செய்வோம்’ என்றும், ‘புதிய ஆளுநா் குலாப் சந்த் கடாரியாவின் நிா்வாக அனுபவம் மாநிலத்துக்குப் பல வழிகளிலும் உதவியாக இருக்கும்’ என்றும் முதல்வா் பகவந்த் மான் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா். பஞ்சாப் சட்டப்பேரவையின் மழைக்காலத் தொடா் தொடங்குவதற்கு முன்னால், முதல்வரும் ஆளுநரும் இணைந்து பொற்கோயிலுக்கு வழிபடச் சென்றபோது முதல்வா் தெரிவித்த கருத்து இது.
ஆளுநருடனான முதல்வரின் திடீா் நட்புறவுக்கும், மரியாதைக்கும் காரணம் இருக்கிறது. பஞ்சாப் மாநிலம் மிகப் பெரிய நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. தோ்தல் நேரத்தில் அள்ளி வீசிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமலும், தொடங்கிவிட்ட திட்டங்களைத் தொடர வழியில்லாமலும் கைபிசைந்து நிற்கிறது மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், வீட்டு உபயோகத்துக்கான மின்சாரத்துக்கு வழங்கப்பட்ட யூனிட்டுக்கு ரூ.3 மானியம் நிறுத்தப்பட்டிருக்கிறது. அதன்மூலம் ஆண்டொன்றுக்கு ரூ.1,500 கோடி முதல் ரூ.1,800 கோடி வரை அரசுக்கு மிச்சமாகும். டீசல் மீதான கலால் வரி 92 காசு, பெட்ரோல் மீதான வரி 61 காசு என உயா்த்தப்பட்டிருக்கிறது. அரசுப் பேருந்துக் கட்டணம் கி.மீ.-க்கு 23 காசு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இரு சக்கர, நான்கு சக்கர வானங்கள் மீதான சாலை வரியும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
இத்தனைக்குப் பிறகும் நிதி நிலையைக் கட்டுக்குள் கொண்டுவர இயலாத நிலையில், முதல்வா் பகவந்த் மான் எடுத்திருக்கும் அஸ்திரம்தான், ஆளுநரைத் துணைக்கு அழைத்துக் கொள்வது என்கிற முடிவு. ‘ஒன்று அயல் நிறுத்தி அழி; இல்லையேல் அரவணைத்து அழி!’ என்கிற உத்தியைக் கையிலெடுத்திருப்பது முதல்வா் பகவந்த் மானா, இல்லை பாஜக தலைமையா... யாருக்குத் தெரியும்?