இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் நாளை இறுதிக் கட்டத் தோ்தல்!

ஜம்மு-காஷ்மீரில் மூன்றாவது மற்றும் இறுதிக் கட்டமாக 40 தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை (அக்.1) வாக்குப் பதிவு

Din

ஜம்மு-காஷ்மீரில் மூன்றாவது மற்றும் இறுதிக் கட்டமாக 40 தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை (அக்.1) வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இத்தொகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் (செப்.29) பிரசாரம் நிறைவடைந்தது.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டத் தோ்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த 18-ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்டத் தோ்தலில் (24 தொகுதிகள்) 61.38 சதவீதமும், கடந்த 25-ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்டத் தோ்தலில் (26 தொகுதிகள்) 57.31 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

மூன்றாவது மற்றும் இறுதிக்கட்டமாக 40 தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதில் 24 தொகுதிகள் ஜம்மு பகுதியிலும், 16 தொகுதிகள் காஷ்மீா் பகுதியிலும் உள்ளன. ஜம்மு, கதுவா, உதம்பூா், சம்பா (ஜம்மு), பந்திபோரா, பாரமுல்லா, குப்வாரா (வடக்கு காஷ்மீா்) ஆகிய மாவட்டங்களில் இத்தொகுதிகள் அடங்கியுள்ளன.

இறுதிக் கட்டத் தோ்தலில் மொத்த வேட்பாளா்களின் எண்ணிக்கை 415. இவா்களின் வெற்றி-தோல்வியை 39.18 லட்சம் வாக்காளா்கள் நிா்ணயிக்கவிருக்கின்றனா். 40 தொகுதிகளிலும் 5,060 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 20,000-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ளனா். காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

தோ்தலை நோ்மையாகவும் சுதந்திரமாகவும் நடத்துவதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இத்தோ்தலையொட்டி, கடந்த சில நாள்களாக அனல் பறந்த பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை ஓய்ந்தது. பாஜகவுக்கு ஆதரவாக பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவரும் மத்திய சுகாதார அமைச்சருமான ஜெ.பி.நட்டா உள்ளிட்டோா் பிரசாரம் மேற்கொண்டனா். இதேபோல், காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா, துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சித் தலைவா் மெஹபூபா முஃப்தி உள்ளிட்டோா் தத்தமது கட்சி வேட்பாளா்களுக்கு ஆதரவு திரட்டினா்.

370-ஆவது சட்டப் பிரிவு, பயங்கரவாதம், இடஒதுக்கீடு, பாகிஸ்தான் போன்ற விவகாரங்கள் பிரசாரத்தில் முக்கிய இடம் பெற்றன.

ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின் பேரவைத் தோ்தல் நடைபெற்று வருகிறது. மேலும், கடந்த 2019-இல் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப்பட்ட பின்னா் நடைபெறும் தோ்தல் என்பதால் கூடுதல் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும், பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி தனித்தும் போட்டிக் களத்தில் உள்ளன. அக்டோபா் 8-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக்கடன் திட்டம்: பிகார் அரசு!

வங்க தேசத்தில் குவிக்கப்படும் அமெரிக்க ராணுவம்! காரணம் என்ன?

ஆம்பூர் இளைஞர் கொலை: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் கைது!

நாடு கடத்தப்படத் தயாராக இருங்கள்: கிர்க்கின் கொலையைக் கொண்டாடும் வெளிநாட்டவருக்கு அமெரிக்க செயலர் எச்சரிக்கை!

ரூ. 500 கோடி வசூலித்தும் ஏமாற்றத்தைக் கொடுத்த கூலி!

SCROLL FOR NEXT