மும்பை 26/11 தாக்குதலில் முக்கியக் குற்றவாளியாக இருக்கும் தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது என்பது, பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட 6 அமெரிக்கர்களுக்கும், மற்றவர்களுக்கும் நீதியைக் கொடுப்பதற்கான முக்கிய நடவடிக்கையாகும் என அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் பிறந்து, கனடிய குடியுரிமை பெற்ற 64 வயது தஹாவூர் ராணா, அமெரிக்காவிலிருந்து தனி விமானம் மூலம் இந்தியா கொண்டுவரப்பட்டுள்ளார்.
மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் செயல்பட்டவர்களில் முக்கியமான நபராகக் கருதப்படும் தஹாவூர் ராணா, தனது குழந்தைப் பருவக் கால நண்பரான பாகிஸ்தானைச் சேர்ந்த அமெரிக்காவில் இருக்கும் பயங்கரவாதி டேவிட் ஹெட்லியுடன் இணைந்து 2008 மும்பை தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள்.
பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஸ்கர் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகளைக் கொண்டு நடத்தப்பட்ட மும்பை தாக்குதல் நடந்து முடிந்தபிறகு, ஹெட்லியை தொடர்புகொண்ட ராணா, இந்தியர்களுக்கு இதுதேவைதான் என்று கூறியிருக்கிறார்.
இந்த தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு, இருவரும் பேசிக்கொண்ட தொலைபேசி அழைப்புகளை, அமெரிக்க பாதுகாப்புத் துறை விசாரணைக்காக பதிவு செய்தபோது, பாகிஸ்தானில் வீர மரணம் அடையும் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதினை, மும்பை தாக்குதலில் கொல்லப்பட்ட 9 பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கும் வழங்க வேண்டும் என்றும் ராணா கூறியதாக அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ளது.
மும்பை தாக்குதலின்போது பாதுகாப்புப் படையினரால் 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிக்கப்பட்டு, விசாரணை முடிந்து 2012ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார்.
பாகிஸ்தானில், தாவூத் கிலானி என்று அழைக்கப்பட்ட டேவிட் ஹெட்லி, லஷ்கர்-இ-தொய்பாவின் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தும் இடங்களைத் தேர்வு செய்ய அடையாளம் தெரியாத வகையில் மும்பைக்கு வந்து செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தஹாவூர் ராணா செய்து கொடுத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்திய அதிகாரிகளுக்கு விசா பெற மோடியான விண்ணப்பங்களை விண்ணப்பித்த விவரங்கள் ராணாவுக்குத் தெரிந்திருக்கிறது என்பதும், ஹெட்லிக்கு போலியான வணிக ஆவணங்களைத் தயாரித்துக் கொடுத்து இந்திய விசா பெற உதவியதாகவும் அமெரிக்க நீதித்துறை குற்றஞ்சாட்டியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.