முகப்பு
இந்தியா

சட்டவிரோத ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் எடுப்பது பாவம்: தில்லி உயர்நீதிமன்றம்

சட்டவிரோத ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தண்ணீர் எடுப்பது பாவத்திற்கு சற்றும் குறைவானது அல்ல என்று தில்லி உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

Updated On : 13 ஏப்ரல், 2025 at 11:30 PM
பகிர்:

சட்டவிரோத ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தண்ணீர் எடுப்பது பாவத்திற்கு சற்றும் குறைவானது அல்ல; இது நிறுத்தப்படாவிட்டால், தென்னாப்பிரிக்கா போன்ற சூழ்நிலையை தில்லி எதிர்கொள்ள நேரிடும்' என்று தில்லி உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

தில்லி ரோஷனாரா பகுதியில் கோயங்கா சாலையில் கட்டுமானத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டடத்தில் பல ஆழ்துளைக் கிணறுகள் சட்டவிரோதமாக நிறுவப்பட்டதாகக் கூறி வழக்குரைஞர் சுனில் குமார் சர்மா தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தில்லி மாநகராட்சி அளித்த பதில் மனுவில் அந்த கட்டடத்தில் 6 ஆழ் துளை கிணறுகள் இருப்பதை உறுதிப்படுத்தியது. அதில் மூன்று ஆழ்துளைக்கிணறுகள் சீல் வைக்கப்பட்டதாக தெரிவித்தது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாய, நீதிபதி துஷார் ராவ் செடேலா ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியதாவது: சட்டவிரோத ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தண்ணீர் எடுப்பது, நீர்மட்டத்தை குறைப்பது பாவத்திற்கு சற்றும் குறைந்ததல்ல. தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரத்தில் என்ன நடந்தது தெரியுமா? கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பல மாதங்களாக இந்த நகரத்தில் தண்ணீர் இல்லை. பெரும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டனர். அந்த நிலை தில்லியிலும் வர வேண்டும் என்று விரும்புகிறீர்களா?

இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, முறையே தில்லி மாநகராட்சி ஆணையர், தில்லி ஜல் போர்டு தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரி ஆகியோரால் நியமிக்கப்பட்ட உயர் அதிகாரிகள் குழுவால் இது போன்ற கட்டடங்களில் ஆய்வு நடத்தப்பட வேண்டும். 10 நாள்களுக்குள் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்.

சட்டவிரோத ஆழ்துளைக் கிணறு எதுவும் செயல்படுவது கண்டறியப்பட்டால், அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சட்டவிரோத ஆழ்துளைக் கிணறுகள் முன்பு செயல்பட்டதாக குழு கண்டறிந்தால், அத்தகைய இயந்திரங்களின் எண்ணிக்கை மற்றும் அவை எப்போது செயல்பட்டன என்பது குறித்து தனது அறிக்கையில் குறிப்பிடவேண்டும்.

அறிக்கையின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், நீர்மட்டத்திற்கு தீங்கு விளைவித்ததற்காக கட்டட உரிமையாளர்கள் மீது சுற்றுச்சூழல் இழப்பீடு விதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்த நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

முழு கட்டுரையைப் படிக்க →