புது தில்லி: பிகார் தேர்தலில் காங்கிரஸ் - ராஷ்திரிய ஜனதா தளம்(ஆர்ஜேடி) கூட்டணியில் முதல்வராக யாரை முன்னிறுத்தப் போகிறோம் என்பதை விரைவில் அறிவிப்போம் என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.
இன்னும் 6 மாதங்களில் பிகார் பேரவை தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், தில்லியில் இன்று(ஏப். 15) கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து காங்கிரஸ் தலைமையுடன் தேஜஸ்வி யாதவ் ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகர்ஜுன் கார்கே, ராகுல் காந்தி ஆகியோருடன் இரு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்களும் கலந்துகொண்டனர்.
அதன்பின், செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது: “இந்த ஆலோசனைக் கூட்டம் நல்லபடியாக அமைந்தது. அடுத்தக்கட்டமாக ஏப். 17-ஆம் தேதி பாட்னாவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.
தேர்தலுக்கு நாங்கள் முழு அளவில் தயாராக இருக்கிறோம். பிகாரை முன்னேற்ற நாங்கள் விரும்புகிறோம்.
இம்மாநிலத்தில் 20 ஆண்டுகளாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்திருந்தும், இன்றளவும் பிகார் ஏழ்மையான மாநிலமாகவே இருந்து வருகிறது.
முதல்வர் வேட்பாளர் யார் என்பதை ஆலோசனைக்குப்பின், ஒருமனதாக நாங்கள் தேர்ந்தெடுத்து அறிவிப்போம். பிகாரில் இந்த முறை, தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று அரசு அமைக்காது” என்றார்.
ஏற்கெனவே, பிகாரின் துணை முதல்வராக பதவி வகித்திருந்த தேஜஸ்வி யாதவ் இம்முறை முதல்வர் வேட்பாளராக களமிறங்குவாரா என்பதே அக்கட்சி தொண்டர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. இத்தேர்தலில் தங்கள் கூட்டணி வெற்றிபெற்றால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் இணக்கமான உறவை கடைப்பிடித்து வரும் தேஜஸ்விக்கு, முதல்வர் நாற்காலியில் அமர வாய்ப்பு வழங்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்தரப்பில், பிகார் முதல்வர் நிதீஷ் குமாரையே மீண்டும் முதல்வராக்க, பாஜக தலைமை விரும்பும் என்றும் பரவலாக பேசப்படுகிறது.
இந்திய அரசியலில் மூத்த தலைவர்களுள் ஒருவராக திகழும் நிதீஷ் குமாரை எதிர்த்து இம்முறை, வயது வித்தியாசத்தில் இளம் தலைமுறை அரசியல் தலைவரான தேஜஸ்வி யாதவ் போட்டியிடுவதால் பிகார் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.