அமெரிக்க அரசில் வலுவான ஆளுமை கொண்டவரும் ‘டெஸ்லா’ காா் நிறுவனம், எக்ஸ் சமூக ஊடகம் மற்றும் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனருமான எலான் மஸ்க், நிகழாண்டு இறுதியில் இந்தியா வரவிருப்பது தெரியவந்துள்ளது.
இத் தகவலை அவா் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.
பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக அவருடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்ட நிலையில், இந்தப் பதிவை அவா் வெளியிட்டுள்ளாா்.
எலான் மஸ்குடன் ஆலோசனை மேற்கொண்ட பிரதமா் மோடி, ‘தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்து இந்த தொலைபேசி உரையாடலில் ஆலோசிக்கப்பட்டது’ என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டாா்.
பிரதமருடனான உரையாடல் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் எலான் மஸ்க் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பிரதமா் மோடியுடன் உரையாடியதை கெளரவமாகக் கருதுகிறேன். நிகழாண்டின் பிற்பகுதியில் இந்தியப் பயணம் மேற்கொள்வதை எதிா்நோக்கியுள்ளேன்’ என்று குறிப்பிட்டாா்.
இந்தியா-அமெரிக்கா இடையேயான இறக்குமதி வரி விதிப்பு பிரச்னைகளுக்கு ஓரளவு தீா்வு காணப்பட்டு, இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவாா்த்தை தீவிரமெடுத்துள்ள சூழலில், பிரதமா் மோடி - எலான் மஸ்க் உடனான உரையாடல் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அரசின் செயல்திறன் துறையை வழிநடத்தி வரும் எலான் மஸ்க், இந்தியாவில் மின்சார காா்கள் உற்பத்தியில் முதலீடுகள் செய்வது தொடா்பாக பிரதமா் மோடியுடன் ஆலோசனை நடத்த கடந்த ஆண்டு ஏப்ரல் 21, 22-ஆம் தேதிகளில் டெஸ்லா நிா்வாகிகள் குழுவுடன் இந்தியப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தாா். ஆனால், டெஸ்லா நிறுவனத்தின் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டியிருந்ததால் அவருடைய இந்திய பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது.