தேர்தல் ஆணையம் சமரசம் செய்துகொண்டுள்ளது மிகவும் தெளிவாகத் தெரிகிறது என இந்திய தேர்தல் அமைப்பு பற்றி அமெரிக்காவில் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மகாராஷ்டிர மாநிலத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. அப்போது வாக்குப்பதிவில் குளறுபடி நடந்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. எனினும் வாக்குப்பதிவில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என தேர்தல் ஆணையம் கூறியது.
இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இதுபற்றி அமெரிக்காவில் பேசியுள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி, பாஸ்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசியபோது,
"மகாராஷ்டிரத்தில் உள்ள மொத்த மக்கள்தொகையைவிட தேர்தலில் அதிக மக்கள் வாக்களித்துள்ளனர். இதுதான் உண்மை. வாக்குப்பதிவு நடந்த அன்று மாலை 5.30 மணிக்கும் 7.30 மணிக்கும் தேர்தல் ஆணையம் அறிக்கை அளித்தது. இந்த 2 மணி நேரத்தில் 65 லட்சம் வாக்காளர்கள் வாக்குகளை செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியது. இது சாத்தியமே இல்லாதது. ஒரு வாக்காளர், வாக்களிக்க சுமார் 3 நிமிடங்கள் ஆகும். இதனை நீங்கள் கணக்கிட்டால் மறுநாள் அதிகாலை 2 மணி வரை வாக்காளர்கள் வரிசையில் நின்றிருப்பார்கள் என்று அர்த்தம். நாங்கள் இதுதொடர்பான விடியோ பதிவைக் கேட்டதற்கு அவர்கள் மறுத்தது மட்டுமின்றி சட்டத்தையும் மாற்றியுள்ளனர்.
தேர்தல் ஆணையம் சமரசம் செய்துகொண்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. மேலும், இந்த அமைப்பில் ஏதோ தவறு இருக்கிறது. நான் இதை பலமுறை கூறியிருக்கிறேன்" என்று பேசியுள்ளார்.
மேலும் இந்திய - அமெரிக்க உறவு குறித்துப் பேசிய ராகுல், "இரு நாடுகளுக்கும் இடையே நல்ல நட்புறவு இருக்கிறது. இரு நாடுகளும் தொடர்ந்து பயணிக்கும் என்று நம்புகிறேன்" என்றும் தெரிவித்தார்.
இதையும் படிக்க | மே 12-ல் மதுரை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.