ஜம்மு - காஷ்மீர் தாக்குதல் குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
ஜம்மு- காஷ்மீரின் பஹால்காம் பகுதியில் பைசரன் எனும் புகழ்பெற்ற சுற்றுலாத் தளத்தில் இன்று (ஏப்.22) அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த பயங்கரவாதிகள், அங்கு கூடியிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.
இந்தத் தாக்குதலில் 12 சுற்றுலாப் பயணிகள் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து படுகாயமடைந்த நிலையில், ஒருவர் பரிதாபமாக பலியானார். அவர் யார் என்பது குறித்து இதுவரை எந்தவித அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், சௌதி அரேபியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
இதுபற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகையில், “பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஒருபோதும் தப்பிக்க முடியாது. அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். இதுபற்றி பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அவரிடம் விளக்கமளித்துள்ளேன்.
காஷ்மீர் தாக்குதல் பற்றி அதிகாரிகளிடம் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினேன். காஷ்மீரில் பாதுகாப்பு குறித்து தெரிந்துகொள்ள விரைவில் ஸ்ரீநகர் செல்லவிருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ஜம்மு - காஷ்மீர்: சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.