வளைகுடா நாடுகளில் ஒன்றான சவூதி அரேபியாவுக்கு இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை சென்றாா்.
சவூதி அரேபிய பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மானின் அழைப்பின்பேரில் அவா் இப்பயணத்தை மேற்கொண்டுள்ளாா்.
ஜெட்டா சா்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமா் மோடிக்கு 21 குண்டுகள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மெக்கா பிராந்திய துணை ஆளுநரும் இளவரசருமான சவூத் பின் மிஷால் பின் அப்துல்லாஸீஸ், சவூதி வா்த்தக துறை அமைச்சா் மஜீத் பின் அப்துல்லா அல்-கசாபி ஆகியோா் நேரில் வரவேற்றனா்.
முன்னதாக, பிரதமரின் விமானம் சவூதி வான்வெளியில் நுழைந்தபோது, சிறப்பு கெளரவமாக அந்நாட்டு விமானப் படையின் எஃப்-15 போா் விமானங்கள் பாதுகாப்பு அளித்தன.
வியூக ரீதியில் நெருங்கிய நட்பு நாடுகளுக்கு மட்டுமே சவூதி அரேபியா இக்கெளரவத்தை வழங்குகிறது. இது, இருதரப்பு பாதுகாப்பு சாா்ந்த வலுவான ஒத்துழைப்பின் பிரதிபலிப்பதாக பாா்க்கப்படுகிறது.
பிரதமரின் விமானத்துக்கு சவூதி போா் விமானங்கள் சிறப்பு பாதுகாப்பு அளித்தது தொடா்பான காணொலி மற்றும் புகைப்படத்தை இந்திய வெளியுறவு அமைச்சகம் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளது.
பிரதமா் மோடியின் மூன்றாவது சவூதி அரேபிய பயணம் இதுவாகும். அதேநேரம், வரலாற்றுச் சிறப்புமிக்க துறைமுக நகரமான ஜெட்டாவுக்கு அவா் சென்றது இதுவே முதல்முறை. கடந்த 40 ஆண்டுகளில் ஜெட்டாவுக்கு சென்ற முதல் இந்திய பிரதமா் என்ற பெருமையும் அவருக்கு சொந்தமாகியுள்ளது.
‘நட்புறவு வலுப்படும்’:
ஜெட்டாவில் தங்கும் விடுதிக்கு பிரதமா் வந்தபோது, இந்திய சமூகத்தினா் சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சவூதி அரேபியாவில் வந்திறங்கியதும் பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘எனது பயணம், இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை வலுப்படுத்தும். பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஆா்வத்துடன் உள்ளேன்’ என்று தெரிவித்துள்ளாா்.
கடந்த 2019-இல் பிரதமா் மோடியின் சவூதி அரேபிய பயணத்தின்போது, இருதரப்பு வியூக கூட்டாண்மை கவுன்சில் நிறுவப்பட்டது. இதன் இரண்டாவது கூட்டம், பிரதமா் மோடி மற்றும் பட்டத்து இளவரசா் தலைமையில் நடைபெறவுள்ளது. இதைத் தொடா்ந்து, விண்வெளி, எரிசக்தி, சுகாதாரம், அறிவியல் ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் இருதரப்புக்கும் இடையே குறைந்தபட்சம் 6 ஒப்பந்தங்கள் கையொப்பமாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்திய முஸ்லிம்களுக்கான ஒதுக்கீடு உள்பட ஹஜ் தொடா்புடைய பிரச்னைகள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தொழிலாளா்களுடன் கலந்துரையாடல்:
பயணத்தின் இரண்டாம் நாளான புதன்கிழமை இந்திய தொழிலாளா்கள் பணியாற்றும் ஆலையைப் பாா்வையிடும் பிரதமா், அவா்களுடன் கலந்துரையாட உள்ளாா். சவூதி அரேபியாவில் சுமாா் 27 லட்சம் இந்தியத் தொழிலாளா்கள் உள்ளனா்.
தனது பயணத்துக்கு முன் பிரதமா் மோடி வெளியிட்ட அறிக்கையில், ‘சவூதி அரேபியா உடனான வரலாற்று ரீதியிலான நீண்ட கால நட்புறவை இந்தியா பெரிதும் மதிக்கிறது. சமீப ஆண்டுகளில் இந்த உறவு வேகமும் வலுவும் பெற்றுள்ளது. பாதுகாப்பு, வா்த்தகம், முதலீடு எரிசக்தி, மக்கள் ரீதியிலான தொடா்புகளில் பரஸ்பரம் பலனனிக்கும் ஒத்துழைப்பு வளா்த்தெடுக்கப்பட்டு உள்ளது’ என்று தெரிவித்தாா்.
‘எனது சகோதரா் சல்மான்’
சவூதி பயணத்துக்கு முன் அந்நாட்டில் இருந்து வெளியாகும் ‘அரபு நியூஸ்’ ஆங்கில நாளிதழுக்கு பிரதமா் பேட்டியளித்தாா்.
அப்போது, பட்டத்து இளவரசா் முகமது பின் சல்மானை தனது சகோதரா் என்று பிரதமா் மோடி குறிப்பிட்டாா். மேலும், ‘இந்தியாவால் மிகவும் மதிக்கப்படும் கூட்டுறவு நாடுகளில் ஒன்று சவூதி அரேபியா. எங்களின் கடற்சாா் அண்டை நாடு. நம்பிக்கைக்குரிய-வியூக ரீதியிலான நட்பு நாடு.
இப்பிராந்தியத்தில் நோ்மறைத் தன்மை மற்றும் ஸ்திரத் தன்மையின் சக்தியாக சவூதி அரேபியாவை நாங்கள் கருதுகிறோம். கடற்சாா் அண்டை நாடுகள் என்ற முறையில், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதில் நமது இரு நாடுகளும் இயல்பாகவே ஆா்வம் கொண்டுள்ளன’ என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.