ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சிபு சோரன் இன்று காலமானார். அவருக்கு வயது 81.
ஒரு மாதத்துக்கும் மேலாக சிபு சோரன் உடல் நலம் பாதித்திருந்ததாகக் கூறப்படுகிறது. புது தில்லி கங்காராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில, கடந்த ஒரு சில நாள்களாக உடல்நிலை மோசமடைந்துவந்த நிலையில் இன்று காலமானார்.
தந்தை சிபு சோரன் காலமானது குறித்து, ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேம்ந்த் சோரன் தகவல் வெளியிட்டுள்ளார். அன்புள்ள திஷோம் குருஜி நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். இன்று நான் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன் என்று அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 40 ஆண்டுகாலத்துக்கும் மேலாக அரசியலில் ஈடுபட்டிருந்த சிபு சோரன், மக்களவைக்கு எட்டுமுறை தேர்வாகியிருந்தார். மாநிலங்களவை உறுப்பினராக இரண்டு முறை பதவி வகித்தவர். தற்போது இரண்டாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்து வந்தார்.
பிகார் மாநிலத்தோடு இருந்த ராம்கார் மாவட்டத்தில், சாந்தால் சமுதாயத்தில் பிறந்தவர் சிபு சோரன்.
1972 ஆம் ஆண்டு இடதுசாரி தொழிற்சங்கத் தலைவர் ஏ.கே. ராய் மற்றும் குர்மி மஹதோ தலைவர் பினோத் பிஹாரி மஹதோ ஆகியோருடன் இணைந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா என்ற கட்சியை உருவாக்கினார். தொடர்ந்து 2000-ஆவது ஆண்டில் ஜார்க்கண்ட் என்ற தனி மாநிலம் உருவாக வழிவகுத்த மாநில இயக்கத்தின் முக்கிய முகமாக சிபு சோரன் மாறினார்.
சிபு சோரன், முதன்முதலில் 1980 ஆம் ஆண்டு தும்காவிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், பின்னர் அந்த தொகுதி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் கோட்டையாக மாறியது. ஆனால், கடந்த 2019 ஆம் ஆண்டு பாஜகவின் நலின் சோரன் 45,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றபோது, தனது கோட்டையிலேயே சிபு சோரன் தோல்வியைத் தழுவினார்.
2005 ஆம் ஆண்டு முதல் முறையாக ஜார்க்கண்ட் முதல்வரானார் சிபு சோரன், ஆனால் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்ற பெறாததால், முதல்வராகப் பொறுப்பேற்று ஒன்பது நாள்களுக்குப் பின் பதவியை ராஜிநாமா செய்தார்.
இதையும் படிக்க. . போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.