இந்தியாவின் 50-60 கிலோமீட்டர் பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளதாக கடந்த 2019லேயே அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. கூறியுள்ளார்.
இந்திய - சீன எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் 2,000 சதுர கிலோமீட்டர் இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்துவிட்டதாக கடந்த 2022ல் ராகுல் காந்தி பேசியிருந்தார். இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் ராகுல் காந்திக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்திய பகுதியை சீனா ஆக்கிரமித்தது உங்களுக்கு எப்படித் தெரியும்? ஆதாரங்கள் உள்ளதா? நீங்கள் அங்கு சென்று பார்த்தீர்களா? ஆதாரங்கள் இன்றி நீங்கள் எப்படி பேசலாம்? ஒரு உண்மையான இந்தியர் என்றால் நீங்கள் இப்படி பேசியிருக்கமாட்டீர்கள்? என்றெல்லாம் நீதிபதிகள் தீபங்கர் தத்தா, ஏ.ஜி. மாசி அமர்வு கூறியுள்ளது.
தற்போது இதுபற்றி சமூக வலைத்தளங்களில் பலரும் பேசி வருகின்றனர்.
இந்திய பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளதாக கடந்த ஒரு சில ஆண்டுகளாகவே ராகுல் காந்தி தொடர்ந்து கூறி வருகிறார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக ராகுல் காந்தி, ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டபோது லடாக் எல்லைக்குச் சென்று அங்குள்ள மக்களுடன் உரையாடினார்.
அப்போது லடாக் எல்லையில் பாங்காங் சமவெளியில் வசிக்கும் ஒருவர், "இந்திய பகுதிக்குள் 6- 7 கிமீ அளவுக்கு சீனா நுழைந்துள்ளது. ஒரு அங்குல நிலத்தைக்கூட சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால், நாங்கள் எவ்வளவு நிலத்தை இழந்தோம் என்று எங்களுக்குத்தான் தெரியும். நாங்கள்தான் இங்கு வாழ்கிறோம். நாங்கள்தான் இவற்றையெல்லாம் பொறுத்துக்கொள்ள வேண்டும். இது எங்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது. எல்லோரும் தில்லிக்குச் செல்கிறார்கள். நாங்களும் சென்றுவிட்டால் எல்லையை யார் பாதுகாப்பது?" என்று கூறியுள்ளார். இந்த விடியோவை காங்கிரஸ் பகிர்ந்திருக்கிறது.
2023ல் அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளை இணைத்து சீனா புதிய வரைபடத்தை வெளியிட்டது. மேலும் அருணாச்சலின் 11 பகுதிகளின் பெயர்களையும் மாற்றியது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாகவே அதாவது 2019ல் அருணாச்சலப் பிரதேச கிழக்கு பாஜக எம்.பி. தபீர் காவ், இந்தியாவின் 50-60 கிலோமீட்டர் பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளதாகக் கூறியுள்ளார்.
2019 நவம்பரில் நாடாளுமன்றத்தில் பேசிய அவர், மத்திய வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் ஜஸ்வந்த் சிங் ராணுவத் தளபதியாக இருந்தபோது, அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்த ஒரு பகுதி இப்போது இந்தியாவுடன் இல்லை என்று கூறியதுடன் 2017ல் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்ட டோக்லாம் மோதல் போல மற்றொரு மோதல் ஏற்பட்டால் அது அருணாச்சலில்தான் ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், இந்தியாவின் பகுதிகளை சீனா ஆக்கிரமித்து வருவதால் மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன் பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர், உள்துறை அமைச்சர் ஆகியோர் அருணாச்சலப் பிரதேசத்துக்கு வரும்போதெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர்களும் ஊடகங்களும் இதுபற்றி குரல் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
2019ல் நவம்பர் 14 ஆம் தேதி பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய - சீன எல்லையான தவாங் பகுதியில் ஒரு பாலத்தைத் திறந்துவைத்தபோது சீனா ஆட்சேபனை தெரிவித்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
2017 ஆம் ஆண்டு டோக்லாம் பகுதியில் ஒரு சாலையை சீனா விரிவுபடுத்த முயன்ற நிலையில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. எல்லையில் இரு தரப்பினரும் தங்கள் படைகளை நிறுத்திய நிலையில் பேச்சுவார்த்தைக்குப் பிறகு 73 நாள்களுக்குப் பின் இரு நாட்டுப் படைகளும் திரும்ப பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | 'நீங்கள் உண்மையில் இந்தியராக இருந்தால்...' - ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.