இந்தியாவைச் செத்த பொருளாதாரம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியது அவமரியாதையே தவிர அர்த்தம் கொள்ளக்கூடாது என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கூறியுள்ளார்.
சில பெரிய வல்லரசுகளின் தீவிர ஈடுபாட்டுடன் போர்கள் நடத்தப்படும்போதும், உலக ஒழுங்கை நிலைநிறுத்த வேண்டியவர்கள் சீர்குலைவை ஊக்குவிக்கப் பங்களிக்கும்போதும், இந்தியா தனது தேசிய நலன்கள் குறித்து மிகவும் தெளிவாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
புணேவில் கிராஸ்வேர்டு தலைமை நிர்வாக அதிகாரி ஆகாஷ் குப்தாவுடன் உரையாடிய மூத்த காங்கிரஸ் தலைவர், தனது சமீபத்திய புத்தகமான தி லிவிங் கான்ஸ்டிடியூஷன் உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்துப் பேசினார்.
அமெரிக்க அதிபர் கடந்த வாரம் இந்தியப் பொருள்களின் இறக்குமதிக்கு 25 சதவீத வரி விதிப்பதாகவும், ரஷிய ராணுவ உபகரணங்கள் மற்றும் கச்சா எண்ணெய்யை வாங்குவதற்குக் குறிப்பிடப்படாத அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்தியாவைச் செத்த பொருளாதாரம் என்று அழைத்தார்.
குறிப்பாக டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருப்பதால், இது ஒரு கொந்தளிப்பான மற்றும் கணிக்க முடியாத உலகம். டிரம்பை பொறுத்தவரை, அவரது கருத்துகள் அர்த்தமாக எடுத்துக்கொள்ள முடியாது, ஆனால் அதை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நான் கூறுகிறேன்.
அவர் அமெரிக்காவின் அதிபர், அவர் எடுக்கும் முடிவுகள் கொள்கைகளைப் பாதிக்கலாம், மேலும் அந்த கொள்கைகள் நம்மையும் பாதிக்கலாம். உங்கள் பொருளாதாரம் செத்துவிட்டதாக அவர் கூறும்போது, விளையாட்டு திடலில் ஒரு பள்ளி மாணவன் உங்கள் தாய் அசிங்கமானவர் என்று சொல்வது போலாகும். நீங்கள் அதைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இது ஒரு அவமானமாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
கடந்த 6 மாதங்களாக டிரம்பின் கட்டணக் கொள்கைகளின் முழு தாக்கமும் முழு உலகையும் பின்னோக்கி அழைத்துச் சென்றுள்ளது. நாம் இதிலிருந்து மீண்டு வர வேண்டியிருக்கும்.
சர்வதேச அளவில், இந்தியா ஒரு ஆக்கப்பூர்வமான பங்கை வகிக்க வேண்டும், நாம் விதிகளை உருவாக்குபவர்களில் ஒருவராக இருக்க வேண்டுமே தவிர விதிகளை ஏற்றுக்கொள்பவர்களில் ஒருவராக மட்டும் இருக்கக்கூடாது.
மற்றவர்கள் நமக்கு ஆணையிடவோ அல்லது நம்மைத் தள்ளவோ முடியாத நிலையில் நாம் ஒரு குறிப்பிடத்தக்க வீரராக இருக்க வேண்டும். நமது நம்பகத்தன்மை முக்கியமானது.
நாம் ஏற்கெனவே உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருக்கிறோம். உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கிறோம், விரைவில் மூன்றாவது பெரிய நாடாக இருப்போம் என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.