ரூ.17,000 கோடி வங்கிக் கடன் மோசடி மற்றும் பணமுறைகேடு வழக்கில், ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
அனில் அம்பானிக்குச் சொந்தமான "ரிலையன்ஸ் இன்ஃப்ரா' உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் மூலம் ரூ.17,000 கோடிக்கும் அதிகமான கடன் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
2017-2019-ஆம் ஆண்டுகளுக்கு இடையே "யெஸ்' வங்கியிடம் இருந்து ரூ.3,000 கோடி கடன் பெற்று, அதனை சட்டவிரோதமாக வேறு நிறுவனங்களுக்குப் பரிமாற்றியதாகக் கூறப்படுகிறது.
இதேபோல், ரிலையன்ஸ் இன்ஃப்ரா நிறுவனத்தில் இருந்து குழுமத்தின் வேறு சில நிறுவனங்களுக்கு ரூ.6,500 கோடி நிதி மாற்றப்பட்டதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
இந்த முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ பதிவு செய்த வழக்குகள், பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) மற்றும் பிற நிதி நிறுவனங்களின் அறிக்கைகளின் அடிப்படையில் அமலாக்கத்துறை பணமுறைகேடு வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த வழக்கின் ஒரு பகுதியாக, அனில் அம்பானி குழும நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய 25 பேரின் 35 இடங்களில் அமலாக்கத்துறை கடந்த ஜூலை இறுதியில் சோதனை நடத்தியது. இந்தச் சோதனைக்குப் பிறகு, அனில் அம்பானிக்கு எதிராக "லுக் அவுட்' நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்காக தில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10:50 மணிக்கு ஆஜரான அனில் அம்பானி, இரவு 9 மணியளவில் வெளியே வந்தார். மீண்டும் விசாரணைக்கு அவர் அழைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
அனில் அம்பானி குழும நிறுவனத்துக்கு ரூ.68 கோடி மதிப்புள்ள போலி வங்கி உத்தரவாதத்தை அளித்த குற்றச்சாட்டில் ஒடிஸாவைச் சேர்ந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பார்த்தசாரதி விஸ்வால் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
இந்த விசாரணையின்போது, பார்த்தசாரதி பிஸ்வால் உடன் அனில் அம்பானியை நேருக்கு நேர் வைத்து விசாரித்திருக்க வாய்ப்புள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கடன் கணக்கை "மோசடி' என வகைப்படுத்தி, அதன் முன்னாள் இயக்குநர் அனில் அம்பானி மீது ரிசர்வ் வங்கியில் புகாரளிக்க எஸ்பிஐ முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது.
வங்கிக் கடன் மோசடி தொடர்பான விசாரணைக்காக புது தில்லியில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜரான அனில் அம்பானி.
இதையும் படிக்க: அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்!
Delhi: Anil Ambani leaves from the Enforcement Directorate office after around 9 hours of questioning probe into an alleged Rs 17,000-crore loan fraud case.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.