சீனா ஆக்கிரமிப்பு குறித்த ராகுல் காந்தியின் பேச்சுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது பற்றி இன்று தில்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்திய - சீன எல்லையில் 2,000 சதுர கிலோமீட்டர் இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்துவிட்டதாக கடந்த 2022ல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் மேல்முறையீட்டு மனு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் ராகுல் காந்திக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி கண்டனம் தெரிவித்திருந்தனர்.
'இந்தியப் பகுதியை சீனா ஆக்கிரமித்தது உங்களுக்கு எப்படித் தெரியும்? ஆதாரங்கள் உள்ளதா? ஒரு உண்மையான இந்தியர் என்றால் நீங்கள்(ராகுல்) இப்படி பேசியிருக்கமாட்டீர்கள்?' என்று நீதிபதி தீபங்கர் தத்தா சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
சீனா ஆக்கிரமிப்பு குறித்து ராகுல் காந்தி ஒரு சில ஆண்டுகளாகவே பேசி வருவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் இதுதொடர்பாக பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று(ஆக. 5) காலை மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் சந்திப்பு நடைபெற்றது.
இதில் ராகுல் காந்தி, கார்கே, ஜெயராம் ரமேஷ், கனிமொழி, திருச்சி சிவா, சுப்ரியா சுலே உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.
பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக கூட்டத்தில் பேசப்பட்ட நிலையில், ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது பற்றியும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அதில் ராகுல் காந்திக்கு இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் இதுபற்றி,
"அரசியல் கட்சிகளின் ஜனநாயக உரிமைகள் குறித்து தேவையற்ற ஒரு கருத்தை தற்போது பதவியில் உள்ள நீதிபதிகள் கூறியுள்ளதாக இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
தேசிய நலன் சார்ந்த பிரச்னைகள் குறித்து கருத்து தெரிவிப்பது அரசியல் கட்சிகளின் குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவரின் பொறுப்பாகும்.
நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்க அரசு இவ்வளவு அழகாக தவறும்போது எல்லைகளை காக்க அவர்களை பொறுப்பேற்க வைப்பது ஒவ்வொரு குடிமகனின் தார்மீகக் கடமையாகும்" என்று பதிவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.