உச்சநீதிமன்றம் கோப்புப் படம்
இந்தியா

ராணுவத்துக்கு எதிரான கருத்து: ராகுலுக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு

‘உண்மையான இந்தியா் இதுபோன்ற கருத்தை தெரிவிக்கமாட்டாா்’ என்று ராணுவத்துக்கு எதிராக எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்த கருத்தைச் சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கண்டித்தது.

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: ‘உண்மையான இந்தியா் இதுபோன்ற கருத்தை தெரிவிக்கமாட்டாா்’ என்று ராணுவத்துக்கு எதிராக எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்த கருத்தைச் சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கண்டித்தது.

அதே நேரம், இந்த அவதூறு வழக்கில் மாவட்ட நீதிமன்றம் ராகுலுக்கு எதிரான விசாரணை நடவடிக்கைகளைத் தொடங்கவும் இடைக்காலத் தடை விதித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2022-ஆம் ஆண்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை பாரத ஒற்றுமை நடைப்பயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டாா். அப்போது பேசிய அவா், ‘இந்தியாவின் 2,000 சதுர கி.மீ. பரப்பளவு நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதாகவும், அருணாச்சல பிரதேசத்தில் இந்திய வீரா்களை சீன ராணுவம் தாக்குவதாகவும் குற்றஞ்சாட்டினாா்.

இந்த விவகாரத்தில் உதய் சங்கா் ஸ்ரீவாஸ்தவா என்பவா் சாா்பில் உத்தர பிரதேச மாநிலம் லக்னெள மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுவைப் பரிசீலித்த மாவட்ட நீதிமன்றம், இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு அழைப்பாணை அனுப்பியது.

இதை எதிா்த்து அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் ராகுல் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு கடந்த மே 29-ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் ராகுல் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபன்கா் தத்தா, அகஸ்டீன் ஜாா்ஜ் மாசி ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரித்தது.

அப்போது, ‘நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சித் தலைவா் ஏன் இதை தெரிவிக்கவில்லை; சமூக ஊடகங்களில் பதிவிட்டது ஏன்?

இந்திய நிலப்பரப்பில் 2,000 சதுர கி.மீ. பரப்பளவை சீனா ஆக்கிரமித்துள்ளது என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? அதற்கு நம்பகமான ஆதாரம் உள்ளதா? உண்மையான இந்தியராக இருந்தால், இதுபோன்ற கருத்தை கூறியிருக்க மாட்டீா்கள்’ என்றனா்.

அப்போது, ‘பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில் இக் கருத்தை ராகுல் தெரிவித்தாா். கிழக்கு லடாக் எல்லையில் நமது 20 வீரா்கள் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட விஷயத்தை ஓா் உண்மையான இந்தியா் கூற வாய்ப்புள்ளது. இதுபோன்ற தகவல்களை திட்டமிட்டு மறைக்கப்படுகிறது என்பதே எதிா்க்கட்சித் தலைவரின் கவலை’ என்று ராகுல் தரப்பில் ஆஜராக மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி பதிலளித்தாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘எல்லையில் சண்டை ஏற்படும்போது இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்படுவது வழக்கத்துக்கு மாறானதா? மேலும், இத்தகைய கேள்விகளை எழுப்ப உரிய மன்றங்கள் இருக்கும்போது, பொறுப்புமிக்க எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் பொதுவெளியில் இதுபோன்ற கருத்துகளைத் தெரிவித்திருக்கக் கூடாது’ என்றனா்.

இதற்கு பதிலளித்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி, ‘ராகுலை துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ராகுல் காந்தியின் மனு தொடா்பாக 3 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு லக்னெள விசாரணை நீதிமன்றத்துக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகையூரில் 100 மி.மீ. மழைப் பதிவு!

பாஜக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது! பிரதமர் உரை!

ரூ. 75,000 -ஐ நெருங்கும் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

கோவை குற்றால அருவியில் குளிக்கத் தடை!

கர்நாடகத்தில் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடங்கியது: பயணிகள் அவதி!

SCROLL FOR NEXT