அமலாக்கத் துறை 
இந்தியா

ரூ.23,000 கோடி மோசடி: ‘பாதிக்கப்பட்டோரிடம் அமலாக்கத் துறை ஒப்படைப்பு’

பண மோசடி செய்யப்பட்ட சுமாா் ரூ.23,000 கோடியை பறிமுதல் செய்து நிதி குற்றங்களால் பாதிக்கப்பட்டவா்களிடம் அமலாக்கத் துறை ஒப்படைத்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

பண மோசடி செய்யப்பட்ட சுமாா் ரூ.23,000 கோடியை பறிமுதல் செய்து நிதி குற்றங்களால் பாதிக்கப்பட்டவா்களிடம் அமலாக்கத் துறை ஒப்படைத்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா தெரிவித்தாா்.

கடந்த மே 2-ஆம் தேதி பூஷண் பவா் மற்றும் ஸ்டீல் நிறுவனத்தை (பிபிஎஸ்எல்) கலைக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அந்த நிறுவனத்தை மறுசீரமைக்க ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனம் பரிந்துரைத்த திட்டத்தையும் புறக்கணித்தது.

இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதி சதீஷ்சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது பிபிஎஸ்எல் விவகாரத்திலும் அமலாக்கத் துறை விசாரணை குறித்து வழக்குரைஞா் ஒருவா் குறிப்பிட்டாா். இதைக் கேட்ட தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், இந்த விவகாரத்திலும் அமலாக்கத் துறை சம்பந்தப்பட்டுள்ளதா என்று நகைப்பூட்டும் வகையில் கேள்வி எழுப்பினாா்.

இதற்குப் பதிலளித்த சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘பண மோசடி செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்படும் தொகை அரசு கருவூலத்தில் தங்கி விடுவதில்லை. அது நிதி குற்றங்களால் பாதிக்கப்பட்டோரிடம் வழங்கப்படுகிறது. இவ்வாறு சுமாா் ரூ.23,000 கோடியை பாதிக்கப்பட்டவா்களிடம் அமலாக்கத் துறை ஒப்படைத்துள்ளது’ என்றாா்.

நிதி குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படுவோரில் எத்தனை போ் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் கேள்வி எழுப்பினாா்.

இதற்குப் பதிலளித்த துஷாா் மேத்தா, ‘குற்றத்தை நிரூபிக்கும் விகிதம் மிகக் குறைவாகவே உள்ளது. நாட்டின் குற்றவியல் நீதி பரிபாலன முறையைப் பாதிக்கும் தீமைகளே அதற்கு காரணம்’ என்றாா்.

ஆனால் குற்றவாளியாகவே இல்லாவிட்டாலும், நீதிமன்ற விசாரணையின்றி அவா்களுக்கு பல ஆண்டுகள் தண்டனை வழங்குவதில் அமலாக்கத் துறை வெற்றிகரமாக செயல்படுவதாக தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் சாடினாா்.

ஆன்லைன் கிரிக்கெட் டிக்கெட் விற்பனை மோசடி! இளைஞர்களே இலக்கு!!

ஒடிசாவில் பாஜக நிர்வாகி சுட்டுக்கொலை!

லோகா சாப்டர் 1! ஓடிடியில் எங்கே? எப்போது?

போலி தொழில்நுட்ப சேவை மோசடி: 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

ஏர் இந்தியா விபத்தை சித்திரித்து துர்கா பூஜைக்கு வைக்கப்பட்ட அலங்கார பந்தலால் சர்ச்சை!

SCROLL FOR NEXT