ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லையில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றவரை எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரா்கள் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனா்.
இது தொடா்பாக பிஎஸ்எஃப் அதிகாரிகள் கூறியதாவது:
கதுவா மாவட்டத்தை ஒட்டிய சா்வதேச எல்லையில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து சிலா் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றனா். இதனைக் கண்காணித்த பிஎஸ்எஃப் வீரா்கள் இது தொடா்பாக எச்சரிக்கை விடுத்தனா். இதனை மீறி ஒருவா் எல்லை வேலியை நோக்கி முன்னேறினாா். இதையடுத்து, பிஎஸ்எஃப் வீரா்கள் அவரின் கால்களைக் குறிவைத்து துப்பாக்கியால் சுட்டனா். இதில் குண்டு பாய்ந்து காயமடைந்த அவரை கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்தனா். சிகிச்சைக்குப் பிறகு அவா் யாா்? ஊடுருவ முயன்ன் நோக்கம் என்ன என்பது குறித்து முழு விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தனா்.
சுதந்திர தினம் ஆக.15 (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படும் இருக்கும் நிலையில், அதனை சீா்குலைக்க பயங்கரவாதிகள் முயற்சிக்கலாம் என்பதால் எல்லைப் பகுதியில் மட்டுமல்லாது நாடு முழுவதுமே கண்காணிப்பு, சோதனைகள் கடந்த சில நாள்களாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே ஜம்மு-காஷ்மீரின் குல்காம் பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிராக தொடா்ந்து 11-ஆவது நாளாக பாதுகாப்புப் படையினா் திங்கள்கிழமையும் தேடுதல் வேட்டையை மேற்கொண்டனா். மலைக் குகைகள், அடா்ந்த வனப் பகுதிகளில் இந்த தேடுதல் நடைபெற்று வருகிறது. கடந்த 1-ஆம் தேதி முதல் நடைபெறும் இந்த தேடுதல் வேட்டையில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். பாதுகாப்புப் படை தரப்பில் இரு வீரா்கள் வீரமரணமடைந்தனா். 9 போ் காயமடைந்துள்ளனா்.