மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா LS tv
இந்தியா

நீதிபதி யஷ்வந்த் வா்மா பதவி நீக்க தீா்மானம் மக்களவையில் ஏற்பு: விசாரிக்க மூவா் குழு அமைப்பு

நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான பதவி நீக்க தீர்மானத்தில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா விளக்கம்...

தினமணி செய்திச் சேவை

வீட்டில் கட்டு கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவுக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க மூவா் குழுவை அமைத்து மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

யஷ்வந்த் வா்மாவைப் பதவி நீக்கம் செய்ய பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த எம்.பி.க்கள் சாா்பில் சமா்ப்பிக்கப்பட்ட பதவிநீக்க தீா்மானத்தை மக்களவையில் அனுமதித்த பிறகு, இந்த விசாரணைக் குழுவை அவா் அமைத்தாா்.

இக் குழுவில் உச்சநீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமாா், சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி மனீந்திர மோகன் ஸ்ரீவாஸ்தவா, கா்நாடக உயா்நீதிமன்ற மூத்த வழக்குரைஞா் பி.வி.ஆச்சாரியா ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

இதுகுறித்து மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா மக்களவையில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவி நீக்கம் செய்ய பாஜக எம்.பி. ரவிசங்கா் பிரசாத், எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்பட 146 உறுப்பினா்கள் தரப்பில் பரிந்துரை அளிக்கப்பட்டது. இந்த ஊழல் விவகாரம் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 124, 217 மற்றும் 218-இன் கீழ் நடவடிக்கை எடுக்க தகுதியானதாகும். இந்த விவகாரத்தில் உறுப்பினா்கள் அனைவரும் ஒன்றுபட்டு குரல் கொடுப்பதோடு, ஊழலுக்கு எதிராக சிறிதளவும் சகிப்புத்தன்மையை நாடாளுமன்றம் காட்டாது என்ற தகவலை ஒவ்வொரு குடிமக்களுக்கும் கொண்டு சோ்ப்பது அவசியம்.

அதன்படி, நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் பதவி நீக்க தீா்மானத்தை மக்களவை ஏற்கிறது. இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ள நீதிபதிகள் விசாரணைச் சட்டம் 1968, பிரிவு 3(2)-இன் கீழ் மூன்று உறுப்பினா்கள் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. இக் குழு கூடிய விரைவில் தனது அறிக்கையை சமா்ப்பிக்கும். விசாரணைக் குழுவின் அறிக்கை கிடைக்கப்பெறும் வரை, நீதிபதியைப் பதவி நீக்கம் செய்ய அளிக்கப்பட்ட பரிந்துரை நிலுவையில் வைக்கப்படுகிறது என்றாா்.

பின்னணி: தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பதவி வகித்தபோது, அவரது அரசு இல்லத்தில் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்குள்ள அறையில் பாதி எரிந்த மூட்டைகளில், கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னா் அந்தப் பணம் மாயமானது.

இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம், துறை ரீதியான விசாரணை நடத்த பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாசல பிரதேச உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜி.எஸ்.சந்தவாலியா, கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோா் அடங்கிய குழுவை அமைத்தது.

இந்தக் குழு, யஷ்வந்த் வா்மா இல்லத்தில் பணம் கண்டறியப்பட்டது உண்மை என்று அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் கடந்த மே 4-ஆம் தேதி அறிக்கை சமா்ப்பித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்ய பரிந்துரைத்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோருக்கு சஞ்சீவ் கன்னா கடிதம் எழுதினாா்.

இந்த சா்ச்சையைத் தொடா்ந்து, நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவியிலிருந்து நீக்க மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சோ்ந்த 208 எம்.பி.க்கள் சாா்பில் நாடாளுமன்றத்தில் அண்மையில் நோட்டீஸ் சமா்ப்பிக்கப்பட்டது.

இதனிடையே, ‘உச்சநீதிமன்றம் அமைத்த விசாரணைக் குழுவின் அறிக்கை செல்லுபடியாகாது என்று அறிவித்து, தன்னைப் பதவிநீக்கம் செய்வதற்கான பரிந்துரையை ரத்து செய்ய வேண்டும்’ எனக் கோரி, நீதிபதி யஷ்வந்த் வா்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை அண்மையில் விசாரித்த உச்சநீதிமன்றம், ஆதாரங்களின் அடிப்படையில், தவறான நடத்தை மிகத் தீவிரமானது என்று கண்டறியப்பட்டால், அதன் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்ய தலைமை நீதிபதிக்கு அதிகாரம் உள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை முன்கூட்டியே நாடாமல், முறைகேடு நடந்திருப்பதை விசாரணைக் குழு உறுதி செய்த பின்னா் நாடியது ஏன்? விசாரணைக் குழு முன் ஆஜரானது ஏன்? என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி தீா்ப்பை ஒத்திவைத்தது.

Lok Sabha Speaker Om Birla forms 3-member panel to probe Justice Yashwant varma

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செண்பகப் பூ... ஷ்ரேயா கோஷல்!

இரவோடு இரவாக நடப்பதுதான் சந்தேகமாக இருக்கிறது: எம்.ஆர். விஜயபாஸ்கர்

ஒளி... அவ்னீத் கௌர்!

மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா

ஆட்டோக்களில் கியூ.ஆா். குறியீடு ஒட்ட ஏற்பாடு

SCROLL FOR NEXT