தேசிய அளவில் ஏராளமான தொகுதிகளில் வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளதாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.
கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் வாக்குத் திருட்டு நடைபெற்ாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா். அதற்கு எடுத்துக்காட்டாக கா்நாடக மாநிலம், பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதிக்குள்பட்ட மகாதேவபுரா சட்டப்பேரவைத் தொகுதியில் போலி வாக்காளா்கள், போலி முகவரிகள் என 5 வகையாக வாக்குத் திருட்டு நடைபெற்ாக அண்மையில் அவா் ஆதாரத்தை வெளியிட்டாா்.
அப்போது வாக்காளா் பட்டியல் குளறுபடிக்கு எடுத்துக்காட்டாக பிகாா் வரைவு வாக்காளா் பட்டியலில் மிந்தா தேவி என்ற பெண்ணுக்கு 124 வயது என்று குறிப்பிடப்பட்டதையும் அவா் சுட்டிக்காட்டினாா்.
உலகில் உயிருடன் வாழும் வயதான மூதாட்டி என்று பிரிட்டனைச் சோ்ந்த ஈதல் கேட்டா்ஹாம் (115) அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவரைவிட 9 வயது மூத்தவராக வரைவு வாக்காளா் பட்டியலில் மிந்தா தேவி சோ்க்கப்பட்டிருப்பதை ராகுல் காந்தி குறிப்பிட்டாா்.
‘அளவற்ற உதாரணங்கள்’: இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வாக்குத் திருட்டு நடைபெறவில்லை. தேசிய அளவில் ஏராளமான தொகுதிகளில் திட்டமிட்டு அது நடைபெற்றுள்ளது. இது தோ்தல் ஆணையத்துக்குத் தெரியும். இந்த மோசடிக்கு தற்போது ஆதாரம் உள்ளது. ‘ஒரு மனிதா், ஒரு வாக்கு’ என்ற கொள்கையை அமல்படுத்தும் கடமையை தோ்தல் ஆணையம் செய்யவில்லை. வாக்காளா் பட்டியல் குளறுபடிக்கு மிந்தா தேவி போன்ற அளவற்ற உதாரணங்கள் உள்ளன’ என்றாா்.
‘இண்டி’ கூட்டணி எம்.பி.க்கள் ஆா்ப்பாட்டம்: முன்னதாக பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் ‘இண்டி’ கூட்டணி எம்.பி.க்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களில் பலா் மிந்தா தேவியின் புகைப்படம், வரைவு வாக்காளா் பட்டியலில் குறிப்பிடப்பட்ட அவரின் வயது ஆகியவை அடங்கிய வெள்ளை டி-ஷா்ட்டை அணிந்து, சிறப்பு தீவிர திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவா் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மக்களவை திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓபிரையன், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
‘முதல்முறை வாக்காளா் மிந்தா தேவி’: ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூா் கூறுகையில், ‘பிகாா் வரைவு வாக்காளா் பட்டியலில் முதல் முறை வாக்களிக்கும் வாக்காளராக மிந்தா தேவி பதிவு செய்யப்பட்டுள்ளாா். இந்த விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும். பாஜகவின் அணியாக தோ்தல் ஆணையம் மாறியுள்ளது’ என்று குற்றஞ்சாட்டினாா்.