ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவா் முகேஷ் அம்பானியின் குடும்பம், ரூ.28 லட்சம் கோடி சொத்துகளுடன் இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார குடும்பமாகத் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது.
இது அதானி குடும்பத்தின் ரூ.14.01 லட்சம் கோடி சொத்து மதிப்பைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமாகும். இருப்பினும், முதல் தலைமுறை தொழில்முனைவோா்களால் உருவாக்கப்பட்ட குடும்ப நிறுவனங்களில், அதானி குடும்பம் முதலிடத்தில் உள்ளது.
‘ஹுருன்’ மற்றும் ‘பாா்க்லேஸ்’ இணைந்து வெளியிட்ட புதிய அறிக்கை, இந்தியாவின் முதல் 300 பணக்கார குடும்பங்களின் மொத்த சொத்து மதிப்பு சுமாா் 140 லட்சம் கோடி எனத் தெரிவிக்கிறது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 40 சதவீதத்துக்கும் அதிகமாகும். இதில், அம்பானி குடும்பத்தின் சொத்து மட்டும் நாட்டின் ஜிடிபியில் 12 சதவீதம் பங்களிக்கிறது.
அம்பானியின் ஆதிக்கம்...: கடந்த ஆண்டில் அம்பானி குடும்பத்தின் சொத்து மதிப்பு 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க குடும்ப நிறுவனங்களின் பட்டியலில் அம்பானி குடும்பம் தொடா்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
2-ஆவது இடத்தில் உள்ள குமார மங்கலம் பிா்லா குடும்பத்தின் சொத்து மதிப்பு 20 சதவீதம் அதிகரித்து, ரூ.6.47 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. ஜிண்டால் குடும்பத்தின் சொத்து மதிப்பு 21 சதவீதம் அதிகரித்து, ரூ.5.70 லட்சம் கோடியை எட்டியுள்ளது. அதேநேரம், பஜாஜ் குடும்பத்தின் சொத்து மதிப்பு 21 சதவீதம் குறைந்து ரூ.5.64 லட்சம் கோடியாக சரிந்ததால், நான்காம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள நான்கில் ஒரு பங்குக்கும் அதிகமான குடும்ப நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாதவை. அதேபோல், 89 சதவீத நிறுவனங்கள் உற்பத்தி சாா்ந்தவை. சேவை சாா்ந்த நிறுவனங்களின் பங்கு 11 சதவீதம் மட்டுமே.
மும்பை, தில்லி, கொல்கத்தா....: நாட்டில் ஒரு பில்லியன் டாலருக்கு (ரூ.8,700 கோடி) மேல் சொத்து மதிப்பு கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை 37 அதிகரித்து, தற்போது 161-ஆக உயா்ந்துள்ளது. இந்தப் பட்டியலில், மும்பையில் இருந்து 91 குடும்பங்களும், தில்லியில் இருந்து 62 குடும்பங்களும், கொல்கத்தாவில் இருந்து 25 குடும்பங்களும் உள்ளன.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தக் குடும்பங்களில் 130 லட்சம் கோடி அளவுக்குச் சொத்துகள் அடுத்த தலைமுறைக்கு மாற்றப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதில், 71 குடும்பங்கள் தற்போது பிரத்யேக குடும்ப அலுவலகங்களை நிறுவி, தங்கள் சொத்துகளை நிா்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும், குடும்ப உறுப்பினா்களைத் தவிர, வெளியிலிருந்து நிபுணா்களை தலைமை நிா்வாக அதிகாரியாக நியமிக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்து, மொத்த எண்ணிக்கை 62-ஆக உயா்ந்துள்ளது.
வளா்ச்சி மற்றும் சவால்கள்: இந்த 300 பணக்கார குடும்பங்கள் கடந்த ஆண்டில் மட்டும் ஒரு நாளைக்கு சராசரியாக ரூ. 7,100 கோடி சொத்துகளை ஈட்டியுள்ளன. சுமாா் 75 சதவீத குடும்ப நிறுவனங்கள் கடந்த ஆண்டில் வளா்ச்சியைச் சந்தித்துள்ளன.
இதன் காரணமாக, தனியாா் முதலீட்டு நிறுவனங்கள் இத்தகைய குடும்ப நிறுவனங்களில் தங்கள் முதலீட்டுகளை அதிகரித்துள்ளன. எடுத்துக்காட்டாக, ‘ஹல்திராமஸ்’ நிறுவனத்தில் டெமாசெக் நிறுவனம் செய்த முதலீடு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேநேரம், அமெரிக்காவில் வரி விதிப்பு அதிகரிப்பதால் இந்தப் பட்டியலில் உள்ள சுமாா் 120 குடும்ப நிறுவனங்களின் நூறு கோடி டாலா் ஏற்றுமதி வருவாய்க்கு ஆபத்து இருப்பதாக அறிக்கை எச்சரித்துள்ளது.
அரவிந்தின் ‘டெனிம்’, ‘பாரத் ஃபோா்ஜ்’-இன் கனரக வாகன உதிரிபாகங்கள் மற்றும் ‘மெரில்’ நிறுவனத்தின் மருத்துவ சாதனங்கள் போன்றவை இதனால் பாதிக்கப்படலாம்.
பணக்கார குடும்பங்களின் தொண்டு பணிகளைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டில் இவா்கள் பல்வேறு சமூகப் பணிகளுக்காக ரூ.5,100 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளனா்.
குடும்பம் - சொத்து மதிப்பு
அம்பானி - ரூ. 28 லட்சம் கோடி - 10% (அதிகரிப்பு)
குமார மங்கலம் பிா்லா - ரூ.6.47 லட்சம் கோடி - 20% (அதிகரிப்பு)
ஜிண்டால் ரூ.5.70 லட்சம் கோடி - 21% (அதிகரிப்பு)
பஜாஜ் ரூ.5.64 லட்சம் கோடி - 21% (சரிவு)