ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் முக்கிய பங்கு வகித்த 36 விமானப்படை வீரர்களுக்கு வீரதீர விருதுகளை மத்திய அரசு அறிவித்தது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சிலர் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக பலியாகினர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் பயங்கவாதத்தின் பிறப்பிடமாகக் கருதப்படும் முரித்கே மற்றும் பஹவல்பூரில் உள்ள பயங்கரவாத குழுக்களின் தலைமையகங்களையும், பாகிஸ்தான் ராணுவ தளவாடங்களையும் இந்திய விமானப்படை தாக்கியது.
இதில், சிறப்பாக பணியாற்றிய 9 இந்திய விமானப்படை அதிகாரிகளுக்கு நாட்டின் மிக உயர்ந்த மூன்றாவது வீரதீர பதக்கமான ‘வீர் சக்ரா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிரியுடன் நேரடியாக தொடர்பு கொள்ளாமல் துணிச்சலாக செயல்பட்ட ஒருவருக்கு சௌர்ய சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது அசோக சக்ரா மற்றும் கீர்த்தி சக்ராவுக்கு அடுத்த நிலையில் உள்ள விருதாகும். மேலும் 26 பேருக்கு வாயு சேனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் கேப்டன்கள் ஆர்.எஸ். சித்து, மணீஷ் அரோரா, அனிமேஷ் பட்னி மற்றும் குணால் கல்ரா, விங் கமாண்டர் ஜாய் சந்திரா, ஸ்க்வாட்ரான் தலைவர்கள் சர்தக் குமார், சித்தாந்த் சிங், ரிஸ்வான் மாலிக் மற்றும் விமான லெப்டினன்ட் ஏ.எஸ். தாக்கூர் ஆகியோருக்கு வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.