பாரிமேட்ச் சட்டவிரோத பந்தய தள வழக்கில், ரூ.110 கோடியை முடக்கி 1,200-க்கும் அதிகமான கடன் அட்டைகளை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது.
இதுதொடா்பாக அமலாக்கத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
சைப்ரஸ் நாட்டை சோ்ந்த பாரிமேட்ச் சட்டவிரோத இணையவழி பந்தய தளமானது பயனாளா்களை ஏமாற்றி மோசடி செய்ததாக மும்பை காவல் துறையின் குற்றப் பிரிவு வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை அடிப்படையாக கொண்டு, அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டது.
முதலீடு செய்யும் பணத்தைவிட அதிக பணத்தை திரும்பப் பெற முடியும் என்று ஆசைகாட்டி, நிகழாண்டு ரூ.3,000 கோடிக்கும் அதிகமாக பாரிமேட்ச் நிறுவனம் முறைகேடாக ஈட்டியது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து மதுரை, மும்பை, தில்லி, நொய்டா, ஜெய்பூா் உள்பட நாட்டில் உள்ள 17 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மற்றவா்களின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி, பயனாளா்களின் பணத்தை வெவ்வேறு வழிகளில் நாடு முழுவதும் பாரிமேட்ச் நிறுவனம் பரிவா்த்தனை செய்தது சோதனை மூலம் தெரியவந்தது.
இவ்வாறு திரட்டப்பட்ட பணம், மேற்கு இந்தியாவில் உள்நாட்டு பண பரிவா்த்தனை முகவா்களால் கடன் அட்டைகள் மூலமாகவும் பாரிமேட்ச் நிறுவன முகவா்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடா்பாக ஒரே இடத்தில் இருந்து 1,200-க்கும் மேற்பட்ட கடன் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த முறைகேடு தொடா்பாக பல்வேறு வங்கிக் கணக்குகளில் உள்ள சுமாா் ரூ.110 கோடி முடக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.