அவசரநிலை காலத்தைவிட இன்று மோசமான நிலையில் நாடு இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் விமர்சித்துள்ளார்.
நடப்பாண்டு இறுதியில் நடைபெறவுள்ள பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, அங்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. இந்த நடவடிக்கை வாக்காளா்களின் உரிமைகளை பறிக்கும் நோக்கம் கொண்டது என்று எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.
இந்நிலையில், வாக்காளா் பட்டியல் திருத்தம் தொடா்பான முறைகேடுகளுக்கு எதிா்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காகவும் பிகாரில் மாபெரும் பேரணியை மேற்கொள்ள எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
பிகாரில் இன்று(ஆக. 17) ‘வாக்குரிமைப் பேரணி’ தொடங்குகிறது. வாக்குத் திருட்டு விவகாரத்தில் முக்கிய நகர்வாக மெகா பேரணி பிகாரில் நடைபெறவுள்ளது. ‘இண்டி’ கூட்டணிக் கட்சித் தலைவா்களுடன் இணைந்து, ஞாயிற்றுக்கிழமைமுதல் மாநிலம் முழுவதும் வாக்குரிமைப் பேரணியை மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மேற்கொள்கிறாா்.
இதையொட்டி, விழா தொடங்குமிடத்துக்கு ‘இண்டி’ கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வருகை தந்துள்ளனர். இந்தப் பேரணிக்கு புறப்பட்டுச் சென்ற ராஷ்திரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் பேசுகையில், “பாஜக தலைமையிலான மத்திய அரசின்கீழ் நாட்டில் நிலவும் சூழல், அவசரநிலை காலத்தைவிட மோசம்.
நாட்டில் நிலவும் சூழலுக்கு எதிராக நாங்கள் ஒரு போராட்டத்தைக் கையிலெடுத்துள்ளோம். ராகுல் காந்தியும் எங்களுடன் இருப்பது நல்ல விஷயம்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.