தேர்தல் ஆணையமே ‘பாஜகவின் கைகளில் இருக்கும் பாவை போலச் செயல்படுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்’ என்று மக்களவை எம்.பி. மஹுவா மொய்த்ரா விமர்சித்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையத்தை விமர்சித்து, திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா வெளியிட்டுள்ள 3 நிமிட காணொலியில் தேர்தல் ஆணையத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பேசியிருப்பவை அனைத்தும், நகைப்புக்குரிய விதத்தில் இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
ஆக. 17-இல் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ஞானேஷ் குமார் குறிப்பிடும்போது, “பிகாரில் ஏற்கெனவே உயிரிழந்த 22 லட்சம் பேரின் பெயர்களும் வாக்காளர்கள் பட்டியலில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால், அந்த நபர்கள் கடந்த 6 மாத காலத்தில் மறைந்தவர்கள் அல்ல; அவர்கள் உயிரிழந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தநிலையில் அவர்களது பெயர்கள் இன்றளவும் பட்டியலில் இருப்பதாகவும்” மேலும் பல தகவல்களையும் அவர் கூறியிருந்தார்.
இதனைச் சுட்டிக்காட்டிய மஹுவா மொய்த்ரா, “கடந்த ஏப்ரல் மாதம் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோதே இதைக் கண்காணித்து அவர்களது பெயர்களை நீக்கியிருந்தால் இந்தக் குழப்பம் ஏற்பட்டிருக்காது.
அப்போது கடமை தவறி செயல்பட்டதற்காக தேர்தல் அணையம், தலைமை தேர்தல் ஆணையர், அவருடன் சேர்த்து பிற தேர்தல் ஆணையர்கள் ஆகியோர் மீது நியாமான முறையில் தேர்தல் நடத்த தவறியதற்காகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், “உங்கள் கண்காணிப்பின்கீழ் நடைபெற்ற சரிபார்ப்பு பணிகளில், ஏர்கெனவே உயிர்நீத்த வாக்காளர்கள் விவரம் முறையாக சரிபார்க்கப்படவில்லை. இதன்மூலம், கடந்த காலங்களில் ஒவ்வொரு முறையும் நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டவில்லை என்பது தெளிவாகிறது. இதற்கு யாரை பழிசுமத்துவது?”.
“எங்கள் அனைவரது(எதிர்க்கட்சிகள், பொதுமக்கள்) சராசரி அறிவுத்திறன்(ஐ.க்யூ.) பாஜகவினரின் ஐ.க்யூ. அளவிலேயே இருக்கும் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
அடுத்ததாக, எதிர்க்கட்சிகளால் சுமத்தப்பட்டுள்ள வாக்குத் திருட்டு புகார் குறித்து தேர்தல் ஆணையரால் பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிடப்படும்போது, முறையான உறுதிமொழி பத்திரம் சமர்ப்பிக்க எதிர்க்கட்சிகள் தரப்பை அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனைச் சுட்டிக்காட்டியுள்ள மஹுவா மொய்த்ரா, “இவ்விவகாரத்தில் நாங்கள்(எதிர்க்கட்சிகள்) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையிபோது, ‘தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்கள் யார் என்பது எங்களுக்கும் யாருக்கும் தெரியாது’ என்று நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியிருக்கும்போது, பெயர் தெரியாத 65 லட்சம் வாக்காளர்களைக் கருத்திற்கொண்டு நாங்கள் எப்படி ஆட்சேபணையும் அதற்கான உறுதிமொழி பத்திரத்தையும் சமர்ப்பிக்க இயலும்”.
“பொய்களையும், தவறான தகவல்களையும் சொல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டுமெனவும், முக்கியமாக, ‘பாஜகவின் கைகளில் இருக்கும் பாவை போலச் செயல்படுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்’” என்றும் மஹுவா மொய்த்ரா வலியுறுத்தியுள்ளார்.
இந்தக் காணொலி இப்போது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: ராகுலுக்கு ஒரு வாரம் கெடு..! வாக்குத் திருட்டு குற்றச்சாட்டில் உறுதிமொழி பத்திரம் சமா்ப்பிக்க வேண்டும்!
இதையும் படிக்க: உச்சநீதிமன்ற உத்தரவு எதிரொலி: பிகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் பெயர் பட்டியல் வெளியீடு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.