ரஷியா - உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை என்பது உலகளவில் நடைபெறும் மிகப்பெரிய விளையாட்டு என்று இந்திய முன்னாள் முப்படைகள் தளபதி எம்எம் நரவனே தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷியா அதிபர் விளாதிமீர் புதினின் சந்திப்புக்கு பிறகு, ரஷியா - உக்ரைன் போர் நிறுத்த விவகாரம் தீவிரமடைந்துள்ளது.
கடந்த வாரம் அமெரிக்காவின் அலஸ்காவுக்கு சென்ற புதின், டிரம்ப்பை நேரில் சந்தித்து போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை என்றாலும், முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஐரோப்பிய நாட்டு தலைவர்களுடன் அமெரிக்காவுக்கு சென்றுள்ள உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி, வெள்ளை மாளிகையில் டிரம்ப்புடன் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இதுதொடர்பாக புணேவில் நடைபெற்ற நிகழ்வில் நரவனே பேசியதாவது:
”டிரம்ப் - புதின் சந்திப்பு கலவையான முடிவுகளுடன் நிறைவடைந்தது. இருவருக்கும் இடையே மறைமுகமாக நடந்திருக்கக்கூடிய விஷயங்களில் ஐரோப்பிய நாடுகளுக்கு மகிழ்ச்சியில்லை.
ஸெலன்ஸ்கி - டிரம்ப் இடையே சந்திப்பு இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளின் பல பிரதமர்களுடன் அமெரிக்காவுக்கு ஸெலன்ஸ்கி சென்றுள்ளார். ஐரோப்பிய நாடுகளுக்கு நலன் இல்லாத எவ்வித மறைமுக ஒப்பந்தமும் டிரம்ப் - புதின் இடையே இருக்கக்கூடாது என்று அவர்கள் கவலையில் உள்ளார்கள்.
இது உலகளவில் விளையாடப்படும் மிகப்பெரிய விளையாட்டு. என்ன நடக்கும் என்பதை நம்மால் சொல்ல முடியாது. சக்திவாய்ந்த நாடாக இருப்பதால், பலத்தை ஒருதலைபட்சமாக பயன்படுத்தி எல்லைகளை மாற்ற அனுமதிக்கிறீகளா என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். இந்தியா அதற்கு எப்போதும் எதிராக உள்ளது.
மோதல்களை பலத்தால் அல்லாமல், பேச்சுவார்த்தை மற்றும் விவாதங்கள் மூலம் தீர்க்க வேண்டும் என்று இந்தியா எப்போதும் கூறி வருகிறது. அதனால்தான் நமது பிரதமர், ‘இது போரின் சகாப்தம் அல்ல, போர் கடைசி முயற்சியாகவே இருக்க வேண்டும்’ எனக் கூறி வருகிறார்” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.