பழங்குடி சமூகத்தினருக்கு சொந்தமான 8.10 கோடி சதுர அடி நிலத்தை அதானியின் சிமெண்ட் ஆலைக்கு ஒதுக்கிய அசாம் அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அசாம் மாநிலம் திமா ஹசாவோ மாவட்டத்தில் பழங்குடியினரின் 3,000 பிகா (8.10 கோடி சதுர அடி) நிலத்தை மகாபால் சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்கு மாநில அரசு ஒதுக்கியுள்ளது.
நீதிபதி அதிருப்தி
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குவாஹாட்டி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், அந்த நிலங்கள் தரிசு நிலம் என்றும், சிமெண்ட் ஆலை நடத்துவதற்கு அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய் குமார் மேதி, ”3,000 பிகாக்கள் என்பது ஒரு முழு மாவட்டம். என்ன நடக்கிறது? ஒரு தனியார் நிறுவனத்துக்கு 3,000 பிகாக்கள் வழங்கப்படுகிறதா? தரிசு நிலம் என்றாலும், 3,000 பிகாக்கள் கொடுக்கப்படுவதா?
இது என்ன மாதிரியான முடிவு? இது என்ன நகைச்சுவையா? தனியார் நலன் அல்ல, பொதுநலனே முக்கியம்” எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் கண்டனம்
அசாம் அரசுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில்,
“அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, சிமெண்ட் ஆலைக்காக 3,000 பிகா (8.1 கோடி சதுர அடி) பழங்குடி நிலத்தை அதானி நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கிறார்.
ஏழை மக்கள் போராடிக் கொண்டிருக்கும்போது, நாட்டின் வளங்களை மோடியின் நண்பரான அதானிக்கு வெட்கமின்றி கொடுக்கிறது முதலாளித்துவத்துக்கு ஆதரவான பாஜக அரசு.
இது மக்களுக்கான ஆட்சி அல்ல, மோடியின் நண்பர் அதானியின் ஆட்சி.
அவர்களின் செயல்களுக்கு அவர்களையே பொறுப்பேற்கச் செய்ய வேண்டும். மக்களுக்கு உண்மையாக சேவை செய்யும் அரசைக் கோர வேண்டிய நேரமிது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதானி குழுமம் மறுப்பு
இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து அதானி குழுமம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், மகாபால் சிமெண்ட் நிறுவனத்துக்கு அதானி குழுமத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.