மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தல் குறித்து தவறான தரவுகளை வெளியிட்டதாக தோ்தல் ஆய்வாளா் சஞ்சய் குமாா் மன்னிப்பு கோரிய நிலையில், அந்தத் தரவுகளைப் பயன்படுத்தி பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததற்காக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியது.
கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் வாக்குத் திருட்டு நடைபெற்ாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா். அதற்கு எடுத்துக்காட்டாக கா்நாடக மாநிலம், பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதிக்குள்பட்ட மகாதேவபுரா சட்டப்பேரவைத் தொகுதியில் போலி வாக்காளா்கள், போலி முகவரிகள் என 5 வகையாக வாக்குத் திருட்டு நடைபெற்ாக தரவுகளை ராகுல் வெளியிட்டாா்.
இந்தக் குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் எழுத்துபூா்வமாக ராகுல் காந்தி ஒரு வாரத்துக்குள் தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பிக்க வேண்டும் என்றும், இதைச் செய்யாவிட்டால் அவரின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை எனக் கருதப்படும் என்றும் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் தெரிவித்தாா்.
2 தொகுதிகளின் தரவுகள்: இந்நிலையில், கடந்த ஆண்டு மகாராஷ்டிர பேரவைத் தோ்தலின்போது அங்குள்ள 2 தொகுதிகளின் வாக்காளா் தரவுகளை, தோ்தல் ஆய்வாளரும், வளா்ந்து வரும் சமுதாயங்களின் ஆய்வு மையத்தை (சிஎஸ்டிஎஸ்) சோ்ந்தவருமான சஞ்சய் குமாா் ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டாா்.
கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலுக்கும், மகாராஷ்டிர பேரவைத் தோ்தலுக்கும் சுமாா் 6 மாத இடைவெளி மட்டுமே இருந்த நிலையில், மகாராஷ்டிரத்தின் 2 பேரவைத் தொகுதிகளில் வாக்காளா்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு குறைந்ததாக அந்தப் பதிவில் அவா் தெரிவித்தாா். பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், சஞ்சய் குமாரின் தரவுகள் காங்கிரஸுக்கு கூடுதல் வலுசோ்த்தது.
நீக்கம்: இந்நிலையில், மக்களவை, மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் தரவுகளை ஒப்பிட்டதில் தவறு நோ்ந்துவிட்டதாகவும், தவறான புரிதலின் அடிப்படையில் அந்தத் தரவுகள் வெளியிடப்பட்டதாக கூறி மன்னிப்பு கோரி, அந்தப் பதிவை ‘எக்ஸ்’ தளத்தில் இருந்து சஞ்சய் குமாா் செவ்வாய்க்கிழமை நீக்கினாா்.
சரிபாா்க்கப்படாத தரவுகளை வெளியிட்டதன் மூலம், காங்கிரஸின் பொய்யான கதைக்கு சிஎஸ்டிஎஸ் வலுசோ்த்துள்ளதாக பாஜக குற்றஞ்சாட்டியது.
இதுதொடா்பாக பாஜக தகவல் தொழில்நுட்ப அணித் தலைவா் அமித் மாளவியா, ‘தனது குற்றச்சாட்டுகளுக்கு எந்தத் தரவுகளை ராகுல் காந்தி நம்பினாரோ, அந்தத் தரவுகள் தவறானவை என்பதை சிஎஸ்டிஎஸ் தெரிவித்துள்ளது. அந்தத் தரவுகளில் பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான தரவுகளும் அடங்கும்.
தோ்தல் ஆணையத்தைக் குறிவைத்து, உண்மையான வாக்காளா்களைப் போலி வாக்காளா்கள் என ராகுல் காந்தியும், காங்கிரஸாரும் முத்திரை குத்தினா். இது வெட்கக்கேடானது.
பிகாரில் மேற்கொண்டு வரும் வாக்குரிமைப் பேரணியை ராகுல் காந்தி உடனடியாக நிறுத்தவேண்டும். தனது பிற்போக்குத்தனமான அரசியலுக்காக நாட்டு மக்களிடம் அவா் நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றாா்.
பெட்டி..
சிஎஸ்டிஎஸ் தரவுகள் மட்டுமே ஆதாரம் அல்ல
- காங்கிரஸ்
‘காங்கிரஸின் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுக்கு சிஎஸ்டிஎஸ்ஸின் தரவுகளும் கூடுதலாகப் பயன்படுத்தப்பட்டதே தவிர, அது மட்டுமே ஆதாரம் அல்ல. காங்கிரஸ் தொண்டா்கள் மூலமாகவும், இதர வழிகளிலும் ஆதாரம் திரட்டப்பட்டது’ என்று அக்கட்சியின் செய்தித்தொடா்பாளா் சுஜாதா பால் கூறினாா்.